மணிலா,
பிலிப்பைன்சின் மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரில் இருந்து சுலு மாகாணம் ஜோலோ தீவு நோக்கி தனியாருக்கு சொந்தமான பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் கப்பல் ஊழியர்கள் 35 பேர் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த கப்பல் பசிலன் மாகாணத்தின் பலுக்-பாலுக் தீவு அருகே சென்றபோது திடீரென தீப்பிடித்தது. இந்த தீ கப்பலின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் கப்பலில் இருந்த பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டனர். மேலும் பலர் பதற்றத்தில் கடலுக்குள் விழுந்தனர்.
இதுகுறித்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து வந்த மீட்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இது ஒரு புறமிருக்க மறுபுறம் கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்கள் மற்றும் கப்பலில் இருந்த பயணிகளை மீட்டு படகுகள் மூலம் கரைக்கு கொண்டு சேர்த்தனர்.
இந்த சம்பவத்தில் மீட்பு படையினரின் துரித நடவடிக்கையால் 230 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
7 பேர் மாயம்
எனினும் இந்த தீ விபத்து நடந்த நேரத்தில் பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்ததால் மீட்பு பணியில் சற்று சிரமம் ஏற்பட்டது. 6 குழந்தைகள் உள்பட 31 பேர் கருகி செத்தனர். காயம் அடைந்த 23 பேரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மேலும் கடலுக்குள் விழுந்ததில் 7 பேர் மாயமானதால் அவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிக பாரம் ஏற்றப்பட்டதால் ஏற்பட்ட கோளாறில் இந்த விபத்து நடந்ததா? என்று கேள்வி எழுந்தது. ஆனால் இந்த கப்பலில் 403 பேர் வரை பயணம் செய்யலாம் என கூறி கப்பல் நிர்வாகம் அதனை மறுத்துள்ளது. எனவே இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.