சென்னை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை, புலி வாலை பிடித்த மதுரைக்காரர் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கிண்டல் பேசியதைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் ரசித்து சிரித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மார்ச் 31) உயர்கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக கேள்வி நேரத்தில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “மதுரையில் எந்தத் தொழிலும் இல்லை. இந்த நிலையில் மெட்ரோ ரயில் வந்து என்ன பயன். எல்லோரும் பாராட்டும் வகையில் தொழில்துறை அமைச்சர் ஒரு தொழிலைக் கொண்டுவர வேண்டும். மதுரை மக்கள் அவரை ஆஹா ஓஹோ என்று பாராட்ட வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “தமிழக மக்கள் அனைவரும் அண்ணன் செல்லூர் ராஜூவை ஆஹா, ஓஹோ என்று கூறுகிறார்கள். நானே அசந்து போய்விட்டேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு புகைப்படம் வந்தது. நாம் எல்லாம் புலியைப் பார்த்தால் ஓடி விடுவோம். மதுரை மக்கள் மாட்டை தான் பிடிப்பார்கள். ஆனால் செல்லூர் ராஜூ புலியின் வாலை பிடித்து வந்துள்ளார். மதுரைக்காரர்கள் விவரமானவர்கள். அண்ணன் செல்லூர் ராஜூ புலியின் வாய் இருக்கிற பக்கம் பிடிக்காமல், வால் இருக்கிற பக்கம் பிடித்துள்ளார். மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். தொழில் முதலீடுகள் தென் மாவட்டங்களில் சமச்சீரான முறையில் கொண்டு வரப்படும்” என்று தெரிவித்தார்.