கர்நாடகா மாநிலம், பெங்களூரு கோரமங்களா பகுதி அருகே கடந்த, 25-ம் தேதி, 19 வயது இளம் பெண்ணை, காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர், கோரமங்களா பகுதியில், கடந்த மாதம், 25-ம் தேதி இரவு, 12 மணிக்கு, ஒரு பூங்கா அருகே, 19 வயது இளம் பெண் தனது ஆண் நண்பருடன் அமர்ந்து புகைபிடித்துக்கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த நான்கு வாலிபர்கள், அப்பெண்ணிடம் ‘பொது இடத்தில் புகை பிடிக்கக்கூடாது,’ எனக்கூறி, வாக்குவாதம் செய்துள்ளனர்.
அதன் பின்னர், அப்பெண்ணின் ஆண் நண்பர் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார். அவர் அங்கிருந்து சென்றதும், மீண்டும் காரில் வந்த நால்வரும் அப்பெண்ணை, கடத்தி, கோரமங்களா பகுதியிலிருந்து ஓசூர் ரோட்டில் அத்திப்பள்ளி வரையில் சென்று, அப்பெண்ணை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின், அப்பெண்ணை திரும்ப கோரமங்களா பகுதியில் இறக்கவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். அப்பெண், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின், போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார். இதையடுத்து, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நேற்று இரவு, விஜய், ஸ்ரீதர், கிரன் மற்றும் சதீஷ் ஆகிய நான்கு வாலிபர்களை கைது செய்த போலீஸார், அவர்களது காரை பறிமுதல் செய்தனர்.