புதுடெல்லி: உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
86 வயதாகும் போப் பிரான்சிஸ்-க்கு மூச்சுக்குழாயில் ஏற்பட்ட தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் இன்னும் சில நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பலாம் என்றும் வாட்டிகன் மற்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போப் பிரான்சிஸ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”போப் பிரான்சிஸ் விரைவாக குணமடையவும் நல்ல ஆரோக்கியத்தைப் பெறவும் பிரார்த்திக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.