புதுடெல்லி: அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களதேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதனை ஆணையம் விரைவில் பரிசீலிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைஎதிர்த்துதாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த தனிநீதிபதி குமரேஷ் பாபு,‘‘கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடத் தடையில்லை’’ என கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தீர்ப்பளித்தார்.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த மாதம் 28ம் தேதி அதிமுகவின் 8வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தனிநீதிபதி வழங்கிய உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவானது சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட நீதிபதிகள் அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் அதிமுகவின் எம்பியும், கட்சியின் மூத்த உறுப்பினருமான சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கான ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளார். அதில்,‘‘பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். எவ்வளவு பெரும்பான்மையின் அடிப்படையில் அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்த அனைத்து விவரங்களும் அதில் அடங்கி உள்ளது. இதையடுத்து ஆவணங்களை விரைவில் பரிசீலிக்கும் தேர்தல் ஆணையம் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிப்பது தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லுமா, இல்லையா என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.