`எந்திரன்’ திரைப்படத்தில் சிட்டிக்கு உணர்வுகள் வந்தபின்னர், அதை உருவாக்கிய டாக்டர் வசீகரனிடம், ப்ரோபசர் போஹ்ரா’ இப்படியாக சொல்வார், ‘கதையே இப்பதான் ஆரம்பிக்கிறது’ என்று. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க தனது முன்பாக இருந்த தடையை தாண்டி விட்டார் எடப்பாடி. முதல் அறிவிப்பாக உறுப்பினர் சேர்க்கையை முடுக்கிவிட்டு இருக்கிறார். சசிகலா, தினகரன் வரிசையில் பன்னீரையும் கட்சியில் இருந்து முழுவதுமாக துடைத்துவிட்டாலும், கட்சிக்குள் பல்வேறு சீர்திருத்தங்களை அவர் மேற்கொண்டு ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

இதுதொடர்பாக அ.தி.மு.க-வின் சீனியர் தலைமை கழக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “பல தடைகளை தாண்டி எடப்பாடியார் பொதுச்செயலாளராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு விட்டார். ஆனாலும், இப்போதும் சீனியர்கள் பலர், தங்களைப் போன்ற ஒரு மாவட்ட நிர்வாகிபோலவே எடப்பாடியைப் பார்க்கிறார்கள். பலரும் எடப்பாடியோடு சரிக்குச் சரியாக அமைச்சர்களாக வலம் வந்தவர்கள்தான். அதுமட்டுமல்ல, ‘நாங்கள் எல்லாரும் சேர்ந்துதானே எடப்பாடியைத் தலைமைப் பொறுப்பில் உட்காரவைத்தோம். அவர்தான் தலைமை, சரி. அதற்காக, அவர் அம்மா ஆகிவிடுவாரா?’ என்று கேட்பவர்கள் இருக்கிறார்கள். தென்மாவட்ட சீனியர்களிடம் இருந்த போக்கு இருப்பது இயல்பாக இருக்கலாம்.
ஆனால், அவருடன் நெருக்கமாக இருக்கும் கொங்குப் பகுதி சீனியர்களும் இதே மனநிலையில் இருக்கிறார்கள். அதனால்தான், ஈரோடு இடைத்தேர்தலில் சீனியர்கள் யாருமே சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. வளர்ந்து வரும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளை வைத்தே, 43,000 வாக்குகளை பெற்றார். எம்.ஜி.ஆர்., அம்மாவுக்கு பிறகு, மூன்றாம் தலைமுறை தலைவராக எடப்பாடி வந்துவிட்டார். ஆனால், கட்சியில் இன்னும் இரண்டாம் தலைமுறையினரே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அவர்களை மாற்றி, நிர்வாகிகள் மத்தியிலும் மூன்றாம் தலைமுறை கட்சியாக்கவேண்டும். இது எடப்பாடிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.” என்றார்.

தொடர்ந்து அமைப்பு செயலாளர் ஒருவரிடம் பேசினோம். “அம்மா இருக்கும்போது பெரும்பாலும் எல்லாருக்கும் ஒற்றை பதவி என்ற நிலைமைதான் இருந்தது. ஆனால், இன்று ஒரே நபர் கட்சியில் 4, 5 பதவிகளுக்கு மேல் வைத்திருக்கிறார்கள். இப்படி இருந்தால், கட்சியின் அதிகாரம் எப்படி பரவலாக்க முடியும். ஒன்றிய செயலாளராக இருக்கும் நபரை திடீரென மாவட்ட செயலாளராக மாற்றிவிடுவார் அம்மா. அதனாலே அவருக்கு கட்டுப்பட்டு இருந்தோம்.
ஆனால், இன்று நிலைமை அப்படியில்லை. பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக பொறுப்பிலேயே இருந்து குறுநில மன்னவர்களாவே செயல்படுகிறார்கள். அந்த குறுநில மன்னர்கள் துரோகிகளுடனும், எதிரிகளுடனும் தொழில் ரீதியாக கைக்கோத்து கட்சியை பலவீனப்படுத்துகிறார்கள். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அந்தத் தொகுதிக்கான மாவட்டச் செயலாளர் கே.சி.கருப்பண்ணன் நைசாக விலகிவிட்டார். அதேபோல, மதுரையில் செல்லூர் ராஜூவுக்கும், ஆர்.பி.உதயகுமாருக்கும் இடையே புது பகையும், திண்டுக்கல் சீனிவாசனுக்கும், நத்தம் விசுவநாதனுக்கும் பழைய பகையும் புகைந்து கொண்டு இருக்கிறது.

வடமாவட்டத்தில் சி.வி.சண்முகத்துக்கும், கே.பி.முனுசாமிக்கும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதேபோல, சென்னை, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக கிட்டதட்ட அழிந்தேவிட்டது. அங்கிருக்கும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவை தாண்டி எதுவுமே செய்யமுடியாது. விழுப்புரம் மாவட்டத்தில் கட்சி நாளுக்கு நாள் தேய்ந்து கொண்டு இருக்கிறது. இதேபோல, ஒருகாலத்தில் கோட்டையாக இருந்த பல மாவட்டங்களை அ.தி.மு.க இழந்து வருகிறது. இதெற்கெல்லாம், மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளே காரணம். அதேபோலதான், கொங்கு பகுதிகளை மையமாக வைத்து திமுக தீவிரமாக செயல்படுகிறது. அங்கிருக்கும் மாவட்ட செயலாளர்கள் பலரும் சீனியர்கள் என்பதால், தி.மு.க-வின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.
இதை சரிசெய்ய இளம் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளித்து அவர்களை வளர்க்கவேண்டிய கட்டாயம் எடப்பாடிக்கு இருக்கிறது. இவ்வளவு பிரச்னைகள் இருந்தால், கட்சியை நிச்சயம் வலுப்படுத்த முடியாது. ஆனால், இதை சரிசெய்ய அம்மாபோல துணிச்சலாக செயல்படவேண்டும். அதற்காக சர்வாதிகாரம் காட்ட தேவையில்லை. எடப்பாடி தற்போது இருக்கும் எளிமையோடு, கட்சி பணிகள் கண்டிப்பாக இருந்தாலே போதும். கட்சியில் கண்டிப்பு இல்லாமல் ஒற்றைத் தலைமையாக நிலைநிறுத்திக் கொள்ளவதில் எடப்பாடியால் ஒருபோதும் முடியாது.” என்றார் விரிவாக…

தலைமை பொறுப்புக்காக தான் முன்பிருந்த சவால்களுக்கு எதிராக சண்டை செய்து எடப்பாடி இன்று அதை பெற்றுவிட்டார். தமிழ்நாட்டை 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆண்ட ஒரு கட்சியின் தலைமை பீடத்தில் அமர்ந்திருக்கும் எடப்பாடி, அந்த பீடத்தின் வெட்கையை இனி அதிகமாக உணர்வார். ஒரு சின்ன தவறு கூட பேரிழப்பை தரும் சூழ்நிலையை உருவாக்கலாம். அதை எப்படி கையாள போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.!