ஆமதாபாத்,
பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்து ஆம்ஆத்மி கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. மோடி பட்டம் பெற்றதாக கூறப்படும் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார். ஆனால், கேட்கப்பட்ட தகவல் 3ம் தரப்பினருடையது எனக்கூறி, அதை அளிக்க டெல்லி மற்றும் குஜராத் பல்கலை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இதனைத்தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். அதில் ‘கேட்கப்பட்ட தகவல்கள் பொதுவெளியின்கீழ் வருகிறது. எனவே கேட்கப்பட்ட தகவல்களை வழங்குமாறு’ மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து குஜராத் நீதிமன்றத்தில் குஜராத் பல்கலை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், பிரதமர் மோடியின் கல்வி விவரங்களை வெளியிட அவசியமில்லை எனக்கூறி மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.