பாட்னா: மோடி குறித்த மற்றொரு அவதூறு வழக்கில் கோர்ட்டில் ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவின் கோலாரில் பேசிய ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் குடும்பப்பெயர் (மோடி) குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவ்விவகாரத்தில் ராகுல்காந்திக்கு எதிராக தொடுக்கப்பட்ட அவதூறு வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன் குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. தொடர்ந்து ராகுலின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இதே விவகாரம் தொடர்பாக பீகார் பாஜக மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுஷில் குமார் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கில், வரும் ஏப்ரல் 12ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி பாட்னா நீதிமன்றம் ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து சுஷில் குமார் மோடி கூறுகையில், ‘பாட்னாவின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ராகுல்காந்தி தரப்பு அறிக்கையைப் பதிவு செய்யும் முன் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் என் தரப்பில் இருந்து, நான்கு சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.