ஹவுரா மேற்கு வங்கத்தில் ராம நவமி ஊர்வலத்தில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து போலீசார் மீது கல் வீச்சு நடத்தப்பட்டதால், ஹவுராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹவுராவின் காசிபரா பகுதியில் நேற்று முன்தினம் ராம நவமி விழாவை ஒட்டி ஊர்வலம் நடந்தது.
45 பேர் கைது
இதில், இரு தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்ததை அடுத்து, பயங்கர கலவரம் ஏற்பட்டது.
போலீசாரின் வாகனங்கள், அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இப்பகுதியில் இருந்த கடைகள் சூறையாடப்பட்டன.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, இதுவரை 45 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
கடைகள் அடைப்பு
இந்நிலையில், இப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் மீது, மர்ம நபர்கள் நேற்று கல் வீச்சு நடத்தினர். இதில், மூன்று போலீசார் பலத்த காயம் அடைந்தனர்.
கல் வீச்சு சம்பவத்தால், காசிபரா பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, இங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டதுடன் வாகன போக்குவரத்தும் முடங்கியது.
கவர்னருடன் அமித் ஷா பேச்சு
ராம நவமி கலவரம் தொடர்பான விபரங்களை அளிக்கும்படி, மேற்கு வங்க கவர்னர் சி.வி.அனந்த போசிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுள்ளார். இது குறித்து கவர்னரிடம் தொலைபேசியில் பேசிய அமித் ஷா, வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹவுராவின் தற்போதைய நிலைமை குறித்து கேட்டறிந்தார். இதற்கிடையே, வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மேற்கு வங்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.