திருவொற்றியூர்: சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைபெறும்போது, குறிப்பிட்ட தொகை முத்திரைதாள் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆனால் ஒரு சில உரிமையாளர்கள் பதிவின்போது முத்திரை தாள் நிர்ணய கட்டணத்தை குறைவாக செலுத்தி, ஆவண பதிவு செய்து விடுவார்கள். இவ்வாறு குறைவான கட்டணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட ஆவணம் சம்பந்தப்பட்ட உரிமையாளருக்கு விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பதிவுத்துறை வாயிலாக இந்திய முத்திரை சட்டம் மற்றும் வருவாய் மீட்பு சட்டத்தின் கீழ், நிலுவையில் உள்ள ஆவணங்கள் மூலம் அரசுக்கு சேரவேண்டிய வருவாயை ஈட்ட ஏதுவாக, முடங்கியுள்ள வசூல் பணிகளை முடுக்கிவிட பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் உத்தரவிட்டார். அதன்படி, சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்த ஆவணங்கள் தொடர்பாக குறைவு முத்திரை தீர்வையை செலுத்த தவறி, அதன் காரணமாக நிலுவையில் உள்ள ஆவணங்களை விதிகளின் படி நிர்ணயிக்கப்பட்ட குறைவு முத்திரைத் தீர்வையை சம்மந்தப்பட்ட கிரையதாரர்கள் செலுத்தி ஆவணங்களை விடுவித்துக் கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முத்திரைதாள் குறைவு கட்டணம் வசூல் முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் சாரதா ருக்மணி உத்தரவின்பேரில் ராயபுரம் சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சார் பதிவாளர் தேவன் தலைமை வகித்தார். சிறப்பு வட்டாட்சியர் ஜெயந்தி, மற்றும் 10 பேர் கொண்ட குழுவினர் முகாமில் பங்கேற்று, குறைவு முத்திரைதாள் கட்டணமாக ரூ.6 லட்சம் வசூல் செய்து, அசல் ஆவணங்களை விடுவித்து சம்பந்தப்பட்ட கிரையதாரர்களுக்கு வழங்கினர்.