வெற்றிமாறன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள விடுதலை திரைப்படம் குறித்து
தலைவர்
கருத்து தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன்
பொல்லாதவனில் தொடங்கிய இயக்குநர் வெற்றி மாறனின் பயணம் தற்போது விடுதலை படம் வரையில் தொட்ர்ந்து வருகிறது. பொல்லாதவன் மற்றும் ஆடுகளம் ஆகிய படங்களில் தனிநபர்களின் வாழ்க்கை முறையை, முரண்களை, மோதல்களை பேசிய வெற்றிமாறன், வட சென்னையில் மண்ணின் மக்களுக்கு நிகழக்கூடிய அரசியலை பேசியவர், அசுரன் படத்தில் சாதி கொடுமையால் ஏற்படும் அவலங்களை பேசினார்.
விடுதலை
இந்தநிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் மக்களையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்க போராடும் குழுவுக்கும், காவல் துறைக்கும் இடையேயான பிரச்சனையை மையமாக வைத்து வந்திருக்கிறது விடுதலை.
இயக்குநர் வெற்றிமாறன்
வெற்றிமாறனின் ஹிட் படங்களின் வரிசையில் தற்போது ‘விடுதலை’ படமும் இணைந்துள்ளது. தமிழ் சினிமாவில் அதிகாரத்திற்கு எதிரான சாமானியனின் குரலை தனது படங்களின் வாயிலாக அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துவரும் இயக்குனர் வெற்றிமாறனின் படைப்பிற்கு, இன்று வெளியாகியுள்ள ‘விடுதலை’ படம் அனைவரின் பாராட்டுக்களையும் அள்ளி வருகிறது. இந்தநிலையில் விடுதலை படத்திற்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
பெண்களுக்கான உரிமை, சாதிய அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு, மத பாகுபாடு, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய தளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தீவிரமாக களமாடி வருகிறார். பட்டியலினத்தவர்களுக்கான சாதிக்கட்சி என அவரை வலதுசாரிக்கள் விமர்சித்தாலும், பாதிக்கப்பட்டவர் எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்காக குரல் கொடுத்து வருகிறார்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் ஆகியோரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு சமூகநீதிக்காக போராடி வருகிறார். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளை தனது கொள்கைகளாக கொண்டு திருமாவளவன் செயல்பட்டு வருகிறார்.
பேராசிரியர் வெற்றிமாறன்
இந்தசூழலில் விடுதலை திரைப்படம் குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளா. இது குறித்து திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், ‘‘தோழர் வெற்றிமாறன் அவர்களின் விடுதலை திரைப்படம் பார்த்தேன். அரசு – அதிகாரம் – ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது.
அரசு என்றால் அதிகாரம்; அதிகாரம் என்றால் ஆயுதம்; ஆயுதம் என்றால் ஆணவம்; ஆணவம் என்றால் எளிய மக்களின் குருதியைச் சுவைக்கும் குரூரமான ஒடுக்குமுறை என்பதை அங்குலம் அங்குலமாக அம்பலப்படுத்துகிறது. மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயுதம் தாங்கிய குழு எவ்வாறு ஆளும் வர்க்கத்துடன் எதிர்வினையாற்றுகிறது என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் ஆழமான உரையாடலுக்கு உட்படுத்துகிறது.
தோழர் வெற்றிமாறன் அவர்கள் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார். வழக்கம் போல இது ‘வெற்றிமாறன் படைப்பு’ என முத்திரை பதித்துள்ளார்’’ என்று தெரிவித்துள்ளார்.