சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் 1980களில் நடந்த உண்மைச் சம்பவத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதன்படி, புலவர் கலியபெருமாள் அல்லது தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் பொன்பரப்பி தமிழரசன் ஆகியோரின் கேரக்டரில் தான் விஜய் சேதுபதி
நடித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு விடுதலை படை
வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம் தமிழ்நாட்டில் நடந்த உண்மைச் சம்பத்தின் பின்னணி என சொல்லப்படுகிறது. விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம், திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியர் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அதிகாரத்துக்கு எதிராக போராடும் ‘மக்கள் படை’ அமைப்பின் தலைவராக நடிப்பில் மிரட்டியுள்ளார். இவரின் இந்த பாத்திரம் தமிழ்நாடு விடுதலை படை அமைப்பின் தலைவர் பொன்பரப்பி தமிழரசனை நினைவு கூர்வதாக ரசிகர்கள் விவாதம் நடத்தி வருகின்றனர்.
யார் அந்த பொன்பரப்பி தமிழரசன்?
1980களில் தமிழ்நாட்டில் நடந்த மிக மோசமான ஒரு ரயில் விபத்து மருதையாற்று பாலம் வெடிகுண்டு சம்பவம். இந்தியாவையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில் 35 பேர் பலியாகினர், பலர் படுகாயம் அடைந்தனர். வட தமிழ்நாட்டில் தமிழ்நாடு விடுதலைப் படை பலமாக செயல்பட்டது. முந்திரிக்காடுகள் தான் விடுதலைப் படையின் பலமாக இருந்தது. தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் பொன்பரப்பி தமிழரசனும் இவர்களது அரசியல் ஆசான் புலவர் கலியபெருமாளும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தனர்.
வாச்சாத்தி வன்கொடுமை
1992ம் ஆண்டு வீரப்பன் தொடர்பான தேடுதல் வேட்டையின் போது தருமபுரி அரூர் அருகே பாதுகாப்பு படையினர் கிராம மக்கள் மீது அத்துமீறலில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் பலாத்கார சம்பவங்கள்தான் வாச்சாத்தி வன்கொடுமை எனப்படுகிறது. இச்சம்பவத்தில் 34 பேர் படுகொலை செய்யப்பட்டனர், 18 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர், 28 சிறுவர்கள் கொடூரமாக பாதிக்கப்பட்டனர். இதற்கு பழிவாங்க தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்கள் சில தாக்குதல்களை மேற்கொண்டனர்.
பெருமாள்வாத்தி விஜய் சேதுபதி
இந்தச் சம்பவங்களில் தொடர்புடைய பொன்பரப்பி தமிரசன், புலவர் கலியபெருமாள் இருவரின் பிரதிபலிப்பாக தான் விஜய் சேதுபதியின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், படத்தின் முதல் காட்சியில் வரும் ரயில் விபத்து, மக்கள் படை, போலீஸாரால் கிராம மக்கள் தாக்கப்படுவது, பெண்களை நிர்வாணமாக்கி வன்கொடுமை செய்வது, பதிலுக்கு விஜய் சேதுபதி குழுவின் தாக்குதல் எல்லாமே மேற்கண்ட உண்மைச் சம்பவங்களை நினைவுப்படுத்தியுள்ளது. விடுதலை படத்தின் டைட்டில் கார்டு போடப்படும் போதே, இது கற்பனையான கதை மட்டுமே எந்த உண்மைச் சம்பவத்தையும் தனிநபரையும் குறிப்பிடவில்லை என வெற்றிமாறனின் வாய்ஸ் ஓவர் வருவது கவனிக்கப்பட வேண்டியது.