புதுடெல்லி: சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை 0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் உயர்த்தி ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அஞ்சலகங்களில் சிறு சேமிப்பு திட்டங்களில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டிற்கான வட்டி விகிதங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக ஒன்றிய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தேசிய சேமிப்பு சான்றிதழ் (என்எஸ்சி) திட்டத்திற்கான வட்டி 7 சதவீதத்தில் இருந்து 7.7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கு 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனாலும், பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎப்) மற்றும் சேமிப்பு கணக்கு டெபாசிட்களுக்கு வட்டி விகிதத்தில் மட்டும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கிசான் விகாஸ் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 7.2 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் முதிர்வு காலம் 120 மாதத்தில் இருந்து 115 மாதமாக குறைந்துள்ளது.