சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் பிரியா (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவரும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும் திருமணத்துக்கு முன்னரே உறவில் இருந்ததால், பிரியா கருவுற்றிருந்தார். இந்த நிலையில் ரஞ்சித், பிரியாமீது சந்தேகம்கொண்டு திருமணத்துக்கு மறுத்திருக்கிறார். தொடர் வற்புறுத்தலின்பேரில் ஐந்து மாதங்கள் கர்ப்பிணியாக இருந்த பிரியாவை, 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரஞ்சித்குமார் திருமணம் செய்துகொண்டார்.
ரஞ்சித்குமார்-பிரியா தம்பதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை ஒன்று பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்து மருத்துவமனையிலிருந்த பிரியாவைப் பார்க்க ரஞ்சித் சென்றிருக்கிறார். அங்கு பிரியாவைப் பார்த்து நலம் விசாரிக்கும்போது, அவரை மருத்துவர்களுடன் இணைத்து தவறாகப் பேசி சண்டையிட்டிருக்கிறார் ரஞ்சித். அதைத் தொடர்ந்து, மனைவி பிரியா, குழந்தையை வீட்டுக்கு அழைத்துச் சென்ற ரஞ்சித், சந்தேகத்தில் அடிக்கடி அவரை தவறாகப் பேசி, சண்டையிட்டு வந்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் ரஞ்சித்குமாரின் கொடுமை தாங்காமல் பிரியாவின் பெற்றோர் அவரையும், அவரின் கைக்குழந்தையையும் சென்னை செம்மஞ்சேரிக்கு அழைத்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில், நேற்று மாலை ரஞ்சித்குமார் சென்னை செம்மஞ்சேரியிலுள்ள மனைவி வீட்டுக்கு வந்து பிரியாவைத் தன்னுடன் புறப்படச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார். அதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. பின்னர் ரஞ்சித், பிரியாவை பலமாகத் தாக்கியதில், அவருக்குத் தலை, காலில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
பிரியா மயங்கியிருந்த நிலையில், ரஞ்சித்குமார் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த இரண்டு மாதக் கைக்குழந்தையின் காலைப் பிடித்து, சுவற்றில் அடித்ததில் குழந்தையின் விலா எலும்பு நொறுங்கியது. மேலும் பின் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு குழந்தை வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின்பேரில், செம்மஞ்சேரி போலீஸார் விரைந்து வந்து ரஞ்சித்தை வீட்டிலேயே கைதுசெய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிரியா அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மனைவிமீதான சந்தேகத்தால், ஒரு குடும்பமே நிலை குலைந்து போயிருக்கிறது.