கன்னியாகுமரி அருகே 4 வருடங்களாக 3 மகன்களை வீட்டிலேயே பூட்டி வைத்திருந்த தாய், மீட்கச்சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இரணியலைச் சேர்ந்த முருகன் – பிரேமா தம்பதிக்கு 3 மகன்கள் உள்ள நிலையில், முருகன் கேரளாவில் பணிபுரிந்து வருகிறார்.
பிரேமா தனது 3 மகன்களையும் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே பூட்டி வைத்துள்ளதாக, பேரூராட்சி தலைவர் அளித்த தகவலின் பேரில், குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் போலீசாருடன் அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது, 4 ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கு சீருடை அணியாமல் சென்ற மகன்களை, ஆசிரியர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் தனது மகன்களை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பள்ளிக்கு அனுப்பவில்லை என கூறிய பிரேமா, அதிகாரிகளை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்து, கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
எதிர்ப்பை மீறி உள்ளே சென்ற அதிகாரிகள், சிறுவர்களை நேரில் சந்தித்து விசாரித்தனர். இந்நிலையில், தாய் பிரேமாவுக்கு கவுன்சிலிங் கொடுத்து சிறுவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.