நாகர்கோவில்: அதிமுக ஆட்சியின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக அம்மா சிமென்ட் திட்டம் 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டது. தமிழக அரசு மாதம் 2 லட்சம் மெட்ரிக் டன் சிமென்ட் கொள்முதல் செய்தது. பல்வேறு சிமென்ட் உற்பத்தியாளர்களிடமிருந்து ரூ.185க்கு கொள்முதல் செய்யப்பட்டு அவை அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரு பை ரூ.190க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் வீடுகளை நிர்மாணிப்பதில் சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தணிக்க 100 சதுர அடிக்கு வீடு கட்டுவோருக்கு 50 மூடை அம்மா சிமென்ட்கள் வழங்கப்பட்டன. இதில் 500 முதல் ஆயிரம் சதுர அடிக்கு 500 மூடைகள் அம்மா சிமென்ட் வழங்கப்பட்டன. 1000 முதல் 1500 சதுர அடிக்கு 750 மூடைகள் வரை அம்மா சிமென்ட் வழங்கப்பட்டது. இதனை போன்று பழுது பார்க்கும் பணிக்கு 10 முதல் 100 மூடைகள் வரை வழங்கப்பட்டது.
இதில் நாகர்கோவில் கோணத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனில் சிமென்ட் விற்பனையில் முறைகேடு நடைபெற்றதாக தெரியவந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் போலியான இன்வாய்ஸ் தயார் செய்து விண்ணப்பதாரர் அல்லாத வெளியாட்களுக்கு அதிக விலைக்கு சிமென்ட் விற்பனை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. 2016, 2017ம் ஆண்டுகளில் இந்த முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதில் அப்போதைய ஜூனியர் குவாலிட்டி இன்ஸ்பெக்டர் புகழேந்தி 750 மூட்டைகள் அம்மா சிமென்ட் திட்ட மூட்டைகளை வெளியாட்களுக்கு ஒரு பைக்கு ரூ.190க்கும் மேல் விற்பனை செய்து ரூ.1,66,875 ஆதாயம் அடைந்துள்ளார். ஜூனியர் குவாலிட்டி இன்ஸ்பெக்டர் ரவி கையெழுத்துகளை போலியாக போட்டு அம்மா சிமென்ட் திட்டத்தின் கீழ் 250 சிமெண்ட் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டதில் ரூ.55,625 தவறான ஆதாயம் அடைந்துள்ளார். இளநிலை உதவியாளர் செல்வராஜ் 100 சிமென்ட் மூட்டைகளை விற்று ரூ.22,250 என்ற தவறான ஆதாயத்தை அடைந்துள்ளார்.
இளநிலை உதவியாளர் சதீஷ்குமார் 250 சிமெண்ட் மூட்டைகளை வேறு சிலருக்கு விற்று ரூ.55,625 ஆதாயத்தை அடைந்துள்ளார். பில் கிளார்க் ஈஸ்வரகுமார் 100 மூட்டைகள் விற்பனை செய்து ரூ.22,250 ஆதாயத்தைப் பெற்றனர் என்பது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் நம்பிக்கை மீறல் மற்றும் உண்மையான பயனாளிகளின் கையெழுத்தை போலியாக தயாரித்து அரசை ஏமாற்றுதல், இன்வாய்ஸ்கள் மற்றும் பிற ஆவணங்களை மோசடியாகப் பயன்படுத்தியது, அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கோணம்-2 குடோனில் ஜூனியர் குவாலிட்டி இன்ஸ்பெக்டர் ரவி, ஜூனியர் அசிஸ்டென்ட் சதீஷ்குமார், ஜூனியர் குவாலிட்டி இன்ஸ்பெக்டர் புகழேந்தி, ஜூனியர் அசிஸ்டென்ட் செல்வராஜ், பில் கிளார்க் ஈஸ்வரகுமார் ஆகிய 5 பேர் மீதும் 8 பிரிவுகளின் கீழ் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.