சென்னை ஐஐடி
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி மெட்ராஸ்) பிஎஸ் பட்டப்படிப்பு (டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ்) மற்றும் என்பிடெல் ஆகியவை, இன்று (31 மார்ச்) தொடங்கவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL)-ஐ அடிப்படையாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திரக் கற்றல் (ML) மாதிரிகளை உருவாக்குவதற்கான போட்டியைத் தொடங்கியுள்ளன.
‘கிரிக்கெட் அண்ட் கோடிங்’ என்ற தலைப்பிலான இந்த தரவு அறிவியல் போட்டிக்காக, செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல் நுட்பங்களின் மூலம் திறமையான மாதிரிகளை உருவாக்கி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் தரவை பகுப்பாய்வு செய்வதற்கு தரவு நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்கள் அழைக்கப்படுகிறார்கள். இப்போட்டிக்கு பதிவு செய்வதற்கான கடைசி நாள் 13 ஏப்ரல் 2023. ஆர்வமுள்ளவர்கள் https://study.iitm.ac.in/ipl-contest என்ற இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்து பங்கேற்கலாம்.
ஸ்கோர் கணிப்பு
கோடிங்-கில் அடிப்படை அறிவும், தரவு அறிவியலில் ஆர்வமும் கொண்ட எவரும் தங்களைப் பதிவு செய்துகொண்டு போட்டியில் இடம்பெறலாம். கோடிங் சவால் மட்டுமின்றி, கோடிங் தெரியாதவர்களும் இதில் இடம்பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. புரோகிராமர்கள் அல்லாதோர் எந்தவொரு கோடிங்கும் எழுதாமல் ‘ஸ்கோரை ஊகித்தல்’ என்ற போட்டியில்லா நிகழ்வில் பங்கேற்கலாம்.
போட்டியின் முக்கிய நோக்கங்களை விளக்கிய ஐஐடி மெட்ராஸ் பிஎஸ் டேட்டா சயின்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ், என்பிடெல் ஆகிய துறைகளின் பொறுப்பு பேராசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் ஆன்ட்ரூ தங்கராஜ் கூறுகையில், “விளையாட்டு, தரவு அறிவியல் ஆகிய இரு உலகங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இப்போட்டியைத் தொடங்குவதில் எங்களுக்கு மகிழ்ச்சி.
ஐ.பி.எல்., தரவு அறிவியல் ஆகிய இரண்டுமே பிரபலமடைந்து வரும் நிலையில், தரவு அறிவியல் கற்போருக்கு அவர்களின் பகுப்பாய்வுத் திறன்களை தற்போது உள்ள துறைகளில் வெளிப்படுத்த இப்போட்டி ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.
ஐஐடி அறிக்கை
கடந்த ஐபிஎல் ஆட்டங்களின்போது வீரர்களின் செயல்திறன், அணியின் செயல்திறன், போட்டி முடிவுகள் எவ்வாறு இருந்தன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட தரவுத் தொகுப்புகள் இப்போட்டியில் பங்கேற்போருக்கு வழங்கப்பட உள்ளன. வரவிருக்கும் ஐபிஎல் ஆட்டங்களில் அணிகளின் ‘பவர் பிளே’ ஸ்கோர்கள் பற்றிய கணிப்புகளை உருவாக்க இந்த தரவைப் பயன்படுத்துவதுதான் இப்போட்டியின் நோக்கமாகும்.
என்ன பரிசு.?
ஐபிஎல் 2023 சீசன் முழுவதும் இந்தப் போட்டி நடத்தப்படும். கணிக்கப்பட்ட மற்றும் உண்மையான மதிப்பெண்களுக்கு இடையேயான வேறுபாடுகளின் அடிப்படையில் பங்கேற்பாளர்கள் புள்ளிகளைப் பெறுவார்கள். போட்டியின் நிறைவில் சிறப்பாகச் செயல்படும் பங்கேற்பாளர்களுக்கு ‘பாரடாக்ஸ் 2023’ எனப்படும் வருடாந்திர பி.எஸ். புரோகிராம் தொழில்நுட்ப மற்றும் கலாச்சார நிகழ்வில் கவர்ச்சிகர பரிசுகளும், கவுரவமும் மற்றும் அங்கீகாரமும் வழங்கப்படும்.
புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் ஆர்வமுடைய எவரும் ஐஐடி மெட்ராஸ்-ல் படிக்க விரும்பினால் அவர்கள் எங்கிருந்தாலும் தங்கள் கனவை நனவாக்கும் வகையில் பிஎஸ் பட்டப்படிப்பு, என்பிடெல் ஆகிய இரண்டும் தனித்துவான வாய்ப்பை வழங்குகின்றன. மேலும் விவரங்களை கீழ்க்காணும் இணையதள முகவரிகளில் காணலாம். https://study.iitm.ac.in/ds, https://nptel.ac.in’’ என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.