Kalakshetra: கலாஷேத்ரா மாணவிகள் புகார்; 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை – சீமான் கண்டனம்

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக ஆசிரியர்கள் மீது புகார் கொடுத்துள்ள மாணவிகள் இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசிக எம்.எல்.ஏ. பாலாஜி இன்று சட்டசபையில் இதுகுறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது அவர், மத்திய அரசு நிறுவனங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது என்றும் காவல்துறை மென்மையான போக்கை கடைபிடிக்கிறது என்றும் குற்றசாட்டு வைத்தார். அதற்கு பதில் அளித்த முதல் ஸ்டாலின், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதற்கிடையே, கலாஷேத்ரா மாணவிகளிடம் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமரி விசாரணை நடத்தினர். தனித்தனியே நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் அம்பலமாகும் என தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், வரும் திங்கட்கிழமை அன்று விசாரணை அறிக்கையை அரசிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் மாணவிகள் போராட்டத்தை கைவிட சம்மதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கலாஷேத்ரா பாலியல் கொடுமை சம்பவத்துக்கு நாம் தமிழர்

கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீமான்

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணிதேவி நுண்கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகள் பலருக்கும் அங்குப் பணியாற்றும் நான்கு ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாகப் பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

இக்கொடுமைக்கு எதிராக மாணவிகள் வீதியில் இறங்கி போராடியும், தொடர்புடைய ஆசிரியர்களை தமிழ்நாடு காவல்துறை கைது செய்யாமல் ஒருதலைச்சார்பாக நடந்துகொள்வது வன்மையான கண்டனத்திற்குரியது.

பாலியல் தொல்லை தொடர்பாக மாணவிகளும், தேசிய மகளிர் ஆணையமும் புகாரளிப்பதும் பின் அதனைத் திரும்பப்பெற்றுக் கொள்வதுமான தொடர் நிகழ்வுகள், குற்றவாளிகளைப் பாதுகாக்க திரைமறைவில் கல்லூரி நிர்வாகம் அதிகார அச்சுறுத்தலின் மூலம் மிகப்பெரிய அழுத்தம் அளிப்பதையே உறுதிப்படுத்துகிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு இனியும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் கலாஷேத்ரா நிர்வாகத்திற்குத் துணைபோகாமல், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்களை உடனடியாக கல்லூரியிலிருந்து நிரந்தரப் பணி நீக்கம் செய்வதோடு, அவர்களை விரைந்து கைது செய்து பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய நீதி கிடைக்கச் செய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

அநீதிக்கு எதிராகப் போராடும் மாணவிகளின் அறப்போராட்டம் வெல்லும் வரை நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.