சென்னை: Rohini Theater Issue (ரோகிணி தியேட்டர் பிரச்சனை) – ரசிகர்களின் கோட்டையாக இருந்து வந்த ரோகிணி தியேட்டரில் இன்று 50 சதவீதம் கூட டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை என்கிற அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ் என எந்தவொரு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானாலும் முதல் காட்சியை திருவிழாவாக ரோகிணி தியேட்டர் கொண்டாடி வரும்.
பிரபலங்களே ரோகிணி தியேட்டரில் தான் அதிகம் சென்று ரசிகர்களுடன் படங்களை பார்ப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று நடந்த அந்த தீண்டாமை சம்பவத்தால் ஏகப்பட்ட ரசிகர்கள் ரோகிணி தியேட்டரை இன்று புறக்கணித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
|
சர்ச்சையில் ரோகிணி தியேட்டர்
காசு கொடுத்து டிக்கெட் வாங்கும் எளிய மக்களை அவர்களின் ஆடை மற்றும் தோற்றம் காரணமாக உள்ளே அனுமதிக்க முடியாது என முதலில் மறுத்து பின்னர் ரசிகர்களின் அழுத்தம் காரணமாக அனுமதித்தாலும், அதற்கு வேறு ஒரு விளக்கத்தை கொடுத்து ரோகிணி தியேட்டர் நிர்வாகம் சர்ச்சையில் தானாக வந்து தலையைக் கொடுத்துள்ளது.
பாய்காட் டிரெண்டிங்
பாலிவுட்டில் சமீப காலமாக பரவலாக பேசப்பட்டு வந்து பாய்காட் டிரெண்டிங்கை நேற்று ரோகிணி தியேட்டரை கண்டிக்கும் விதத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் கையிலெடுத்து தரமான சம்பவத்தை செய்துள்ளனர். தீண்டாமை என்பது வேறோடு அழிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் என்பதை உணர்த்தும் வகையில் இன்று ரோகிணி தியேட்டரில் டிக்கெட் புக்கிங் செய்வதையே ரசிகர்கள் சொன்னபடி செய்து காட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
|
வழக்கு பதிவு
ரோகிணி தியேட்டர் ஊழியர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ரோகிணி திரையரங்கில் நடக்கும் ஊழல்களையும் நெட்டிசன்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். பத்து தல படத்தை பார்க்க வந்து அவமதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்த இளைஞருக்கு சோஷியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிகின்றன.

தியேட்டர் காலி
பத்து தல படம் நேற்று வெளியான நிலையில், இன்று வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்துள்ள விடுதலை படம் வெளியாகி உள்ளது. திருவிழாக் கோலமாக இருக்க வேண்டிய ரோகிணி தியேட்டரில் வெறும் 50 சதவீதம் மட்டுமே டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் ஸ்க்ரீன் ஷாட்டுகளை ஷேர் செய்து வருகின்றனர்.

கர்மா இஸ் பூமரங்
நீ விதைத்த வினையெல்லாம் உன்னை வேர் அறுக்க காத்திருக்கும் என மெர்சல் விஜய் பட வசனத்தை எல்லாம் போட்டு கர்மா இஸ் பூமரங் என நெட்டிசன்கள் ரோகிணி தியேட்டர் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.