சென்னை : நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோரின் கலக்கல் பர்பார்மென்சில் இன்றைய தினம் விடுதலை படம் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் போலீஸ் டிரைவர் குமரேசனாக நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் சூரி.
இப்படி ஒரு கலைஞனை காமெடி களத்தில் அடக்கிவிட்டோமோ என்ற சந்தேகத்தையும் வருத்தத்தையும் இந்தப் படத்தின்மூலம் வெளிப்படுத்யுள்ளார் சூரி.
விடுதலை படம்
நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ லீட் கேரக்டர்களில் நடித்து இன்றைய தினம் வெளியாகியுள்ள படம் விடுதலை. இந்தப்படத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் தான் கதாநாயகன் இல்லை என்றும் கதையின் நாயகன் என்றும் அவர் முன்னதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். படத்தில் போலீஸ் டிரைவர் குமரேசனாக நடித்துள்ளார் சூரி. இந்தக் கேரக்டருக்கு அவர் மிகவும் சிறப்பாக பொருந்தியுள்ளார்.

காமெடி சாயலை வெளிப்படுத்தாத சூரி
முன்னதாக பல காமெடி படங்களில் சூரி நடித்துள்ள நிலையில், அதன் சாயல் ஒரு இடத்தில்கூட விடுதலை படத்தில் தென்படாமல் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் சூரி. பல இடங்களில் அவரின் மெனக்கெடல்கள் மிகவும் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது. சில ஸ்டண்ட் காட்சிகளையும் இதற்கு உதாரணமாக கூறலாம். குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகளில் சூரியின் பங்களிப்பு மிகவும் சிறப்பாக அனைவரையும் கவரும்வகையில் அமைந்துள்ளது.

சிறப்பான கேரக்டர்கள்
படத்தில் விஜய் சேதுபதிக்கு காட்சிகள் குறைவாகவே காணப்படுகிறது. இரண்டாவது பாகத்தில் அவருக்கான காட்சிகள் அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல படத்தின் மற்ற நடிகர்கள் சேத்தன், ராஜீவ் மேனன், கவுதம் மேனன் ஆகியோருக்கும் படத்தில் சிறப்பான கேரக்டர்கள் அமைந்துள்ளன. கிராமத்து பெண்ணாக வரும் பவானிஸ்ரீ படத்தில் வெகுவாக கவனத்தை ஈர்க்கிறார்.

சிறப்பான பங்களிப்பு
தன்னுடைய முந்தைய படங்களின்மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்த வெற்றிமாறன், இந்தப் படத்திலும் அந்த வெற்றிப் பயணத்தை தொடர்ந்துள்ளார். அவரது இந்தப் படத்திற்கு சிறப்பான விமர்சனங்கள் மட்டுமில்லாமல் ரசிகர்களின் ஆதரவும் குவிந்து வருகிறது. இதேபோல படத்தின் மற்றொரு பலமாக இளையராஜாவின் இசையும் அமைந்துள்ளது. இந்தப் படத்திற்காக அவர் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதும் பாடல்கள்மூலம் தெரிகிறது. பின்னணி இசையிலும் மிரட்டியுள்ளார்.

கதக்களி ஆடிய கேமிரா
இதேபோல வேல்ராஜின் கேமிராவும் காடு, மேடு, மலைகளில் கதக்களி ஆடியுள்ளது. படத்தின் வேகத்தை ரயில் குண்டு வெடிப்பு உள்ளிட்ட சில காட்சிகள் குறைத்தாலும், விடுதலை படம் ரசிகர்களின் இதயத்தை வேகமாகவே கவர்ந்துள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரியின் நடிப்பிற்கு தொடர்ந்து திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டுக்களை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

சூரியை பாராட்டிய குரு
இதனிடையே இயக்குநர் சுசீந்திரனும் அறிக்கை மூலம் சூரிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். கதை நாயகனாக விடுதலை படத்தின்மூலம் அடுத்த பரிமாணத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் எனது மாணவன் சூரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டில் வெளியான வெண்ணிலா கபடிக்குழு படத்தின்மூலமே நடிகர் சூரி, திரையுலகிற்கு பரோட்டோ சூரியாக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.