சென்னை : The Elephant Whisperers படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் வளர்த்து வந்த குட்டி யானை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தது.
தருமபுரி மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் காட்டு யானை உணவு மற்றும் தண்ணீர் தேடி கூட்டம் கூட்டம் சுற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளன.
எனவே இந்த பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
குட்டி யானை
கடந்த மாதம் இந்த பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று உணவு தேடி ஊருக்குள் வந்தது. இப்படி வந்த யானை கூட்டத்தின் குட்டி ஒன்று 30 அடி ஆழ கிணற்றில் விழுந்துவிட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த வனத்துறையினர் யானை குட்டியை மீட்டனர். அதனை கூட்டத்துடன் சேர்க்க முயற்சி செய்தனர்.
ஆஸ்கர் தம்பதி
ஆனால், அது முடியாமல் போனதால், வனத்துறையினர் குட்டி யானையை முதுமலைக்கு அனுப்பிவைத்தனர். இந்த யானையை ரகு, அம்மு என்ற குட்டி யானையை வளர்த்து The Elephant Whisperers படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற பொம்மன் பெள்ளி ஆகியோரின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டது. தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கடந்த 17-ந் தேதி வந்து சேர்ந்த யானை குட்டிக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தார்.
உயிரிழந்த குட்டியானை
நேற்று மாலை குட்டி யானைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. யானைக்கு கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்தும் யானையின் உடல் நிலை மோசமானதை அடுத்து, 1 மணி நேரத்தில் குட்டி யானை உயிரிழந்துள்ளது. இதனால், தெப்பக்காடு யானைகள் முகாமில் இருக்கும் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்
அமெரிக்காவில் நடைபெற்ற 95வது அகாடமி விருது வழங்கும் விழாவில், தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த ஆவணப்படம் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்றது., ஆஸ்கார் விருதை வென்ற ‘தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ இயக்குனர் கார்த்திகி மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகிய இருவரும் ஆஸ்கர் விருதுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.