விடுதலை
நடிகர்கள் : சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், தமிழ்.இசை : இளையராஜாஒளிப்பதிவு : R வேல்ராஜ்தயாரிப்பு : எல்ரெட் குமார், RS Infotainmentவெளியீடு : ரெட் ஜெயன்ட்ஸ் மூவிஸ்ரன்னிங் டைம் : 2 மணி 30 நிமிடம்
சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று வெளியாகியுள்ளது.
சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன், இயக்குநர் தமிழ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
முதன்முறையாக வெற்றிமாறன் – இளையராஜா கூட்டணியில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம், ரசிகர்களுக்கு புதுவிதமான திரை அனுபவத்தை கொடுத்துள்ளது.
தற்போது வெற்றிமாறனின் விடுதலை முதல் பாகத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
“Viduthalai Review (விடுதலை விமர்சனம்):”
சாமானிய மக்களால் அரசியலை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஆனால், அவனது மொழியையும் மரபுகளையும் அரசியல் என்னும் அதிகாரம் மூலம் சிதைக்கும் போது அவன் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுவான். இந்த மையக்கரு தான் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை திரைப்படம். சமூகம் சார்ந்த ஒரு முக்கியமான பிரச்சினையை சினிமாவில் பேசும் போது அதன் ஒற்றை முகத்தை மட்டும் காட்டாமல், அதன் பின்னணியில் நிகழும் அரசியல், தனிமனித உளவியல், இயலாமை, எதிர்வினை என அனைத்து நுட்பங்களையும் புரியும்படி பேச வேண்டும். அதில் இந்த முறையும் வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக வெற்றிப் பெற்றுள்ளார்.
1987 கதைக்களம்
விடுதலை திரைப்படம் எழுத்தாளர்கள் தங்கம், ஜெயமோகன் ஆகியோரின் மூலக்கதைகளின் வழியாக உயிர்ப்பெற்றுள்ளது. படம் ஆரம்பிக்கும் போதே இப்படத்தில் வரும் கதையும் அதன் மாந்தர்களும் கற்பனையே என இயக்குநரின் குரலில் விவரிக்கப்படுகிறது. இந்தப் படத்தின் கதைக்களம் 1987- ஆம் ஆண்டு நடப்பதாக இருப்பதால், அதற்கு தேவையான அனைத்து விசயங்களையும் மிக நுணுக்கமாக பார்த்து பார்த்து செதுக்கியுள்ளது விடுதலை படக்குழு.
எளிய மக்களும் வனச் சுரண்டலும்
எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வனச் சுரண்டலில் ஈடுபட நினைக்கிறது அரசும், தனியார் சுரங்க நிறுவனமும். எல்லாம் திட்டமிட்டபடி நடக்கும் நேரம், ரயில் குண்டு வெடிப்பு மூலம் எதிர்ப்பு தெரிவிக்கிறது ஒரு அமைப்பு. அதன் பின்னணியில் பெருமாள் வாத்தியாரும் (விஜய் சேதுபதி) அவரது தோழர்களும் இயக்குவதாக போலீஸாருக்கு தெரிய வருகிறது. காட்டுக்குள் முகாம் அமைத்து அவர்களைத் தேடி வரும் காவல்துறையில், குமரேசன் (சூரி) என்ற காவலரும் வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. போலீஸ் உயர் அதிகாரிகள் இதற்கு முன் பார்த்திடாத பெருமாள் வாத்தியை வெள்ளந்தியான காவலர் குமரேசனால் நெருங்க முடிகிறது. அதன் பின்னணி என்ன, இறுதியில் என்ன ஆனது? என்பது தான் விடுதலை முதல் பாகத்தின் கதை.
மக்களுக்கான அரசியல்
சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் விளிம்புநிலை மக்களுக்கு அரசியல், அதன் அதிகார மமதை போன்றவற்றின் குரூரத்தை முடிந்தவரை எளிமையாக பேசியுள்ளது விடுதலை. விஜய் சேதுபதியும் அவரது சகாக்களும் பயன்படுத்தும் ‘தோழர்’ என்ற ஒற்றை வார்த்தையில், அனைவருக்குமான அரசியல் என்னவென்பதை தெளிவாக விவரித்துவிடுகிறார் இயக்குநர் வெற்றிமாறன். காவல்துறையால் எளிய மக்கள் சுட்டு வீழ்த்தப்படும் போது எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது வழக்கமானது. ஆனால், அதனை ஆளுங்கட்சி கண்டுகொள்ளாமல் விடுவதன் நோக்கம், இவற்றின் பின்னால் இருக்கும் உளவியலை ராஜீவ் மேனன் பேசும் வசனம் மூலம் தெளிவுப்படுத்தும் காட்சி கவனிக்கப்பட வேண்டியது.
குமரேசன் என்ற சூரி
விடுதலை படத்தின் கதை நாயகனாக சூரி, இவரை இந்தப் பாத்திரத்தில் தேர்வு செய்ததன் காரணத்தை திரையில் பார்த்தால் புரியும். சூரியின் மனநிலையில் இருந்து இந்தப் படத்தில் வெளிப்படும் அரசியலும் மிகமிக முக்கியமானது. ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்ற குறளுக்கு ஏற்ப சூரியின் மனநிலை காட்சிக்கு காட்சி மாறுவதும், இறுதியாக அவர் எடுக்கும் வெள்ளந்தியான முடிவுகளும் இப்படத்தின் முதன்மையான உயிரோட்டம். போலீஸாக இருந்தாலும் காவல்துறையில் அதிகாரத்தில் இருப்பவர்களின் முன்பு சூரியும் ஒரு எளியவன் தான் என்பதை இறுதிக் காட்சி வரை எடுத்துச் சென்றவிதம் சபாஷ் பேட வைக்கிறது. சூரியின் கேரியரில் விடுதலை திரைப்படம் தான் உச்சம் எனலாம். அவரை விடவும் இந்தப் பாத்திரத்தை வேறுயாரும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க வாய்ப்பில்லை.
பவானி ஸ்ரீ – விஜய் சேதுபதி
விடுதலை வெளியாகும் வரை அதிகம் கவனிக்கப்படாமல் இருந்தது பவானி ஸ்ரீ பாத்திரம் தான். பாப்பா/தமிழரசி என குமரேசனின் காதலியாக நடித்துள்ள பவானி ஸ்ரீ, பல காட்சிகளில் பிரமிக்க வைக்கிறார். முக்கியமாக நிர்வாணக் காட்சிகளில் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. சில இடங்களில் சூரியை விடவும் ஸ்கோர் செய்து அசத்துகிறார். வாத்தி, வாத்தியார், பெருமாள் வாத்தியார், கோஸ்ட் என பல புனைப்பெயர்களில் வலம் வரும் விஜய் சேதுபதி, இறுதியாக தோழர் என்ற பெரும் பிம்பமாக மனதில் நிறைந்துவிடுகிறார். இரண்டாவது பாகத்தில் தான் விஜய் சேதுபதியின் ருத்ரதாண்டவம் இருக்கும் என்பது முதல் பாகத்தின் க்ளைமேக்ஸில் தெரிந்துகொள்ள முடிகிறது.
மேஸ்ட்ரோ இளையராஜா
முதன்முறையாக வெற்றிமாறனுடன் இளையராஜா கூட்டணி என்றதுமே பயங்கர எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், அது இன்னும் அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுள்ளது என்றால் மிகையாகாது. முதல் பாதியில் பல காட்சிகளை அமைதியாக கடக்கவிட்ட இளையராஜா, அதற்கும் சேர்த்து இரண்டாம் பாதியில் வெளுத்து வாங்கியுள்ளார். தொடர்ச்சியாக பல படங்களுக்கு இசையமைத்து வந்தாலும், விடுதலை படத்தில் இளையராஜா கொடுத்திருப்பது வெறும் இசை என்று சுருக்கி விட முடியாது. விடுதலை படத்தின் ஆன்மாவை தனது இசை ஸ்வரங்களால் பரிபூரணமாக நிரப்பியுள்ளார் மனுசன். மக்களுக்கு எதிராக காவல்துறையின் அதிகாரம் கட்டவிழ்த்து விடப்படும் போது, வருகிறதே ஒரு பின்னணி இசை.! இறுதிக் காட்சியில் சுமார் 15 நிமிடங்கள் இளையராஜாவின் ராஜாங்கம் தான். அங்கே உயிரை கொடுத்து நடித்துள்ள சூரியை கூட அவ்வப்போது பின்னணி இசையால் ஓவர் டேக் செய்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் விடுதலை படத்தின் பின்னணி இசைக்காகவே ஒரு விமர்சனக் கட்டுரை எழுதலாம்.
வெற்றிமாறன் – வேல்ராஜ்
முதல் காட்சியே ரயில் விபத்தில் இருந்து தொடங்குகிறது. அதில் வேல்ராஜ்ஜின் கேமரா 360 டிகிரியிலும் சிங்கிள் டேக்கில் பயணிக்கிறது. அங்கிருந்து தொடங்கிய வேகம் க்ளைமேக்ஸ் காட்சியில் இன்னும் அசுர பாய்ச்சல் நிகழ்த்தியுள்ளது. அவ்வளவு எளிதாக நடந்துகூட செல்ல முடியாத காட்டுப் பகுதிகளில் அசாத்தியமாக ஒளிப்பதிவு செய்து அசத்தியுள்ளார். அதிகார போதையில் தலைவிரித்தாடும் போலீஸாக சேத்தன், போலீஸ் யூனிஃபார்மில் மனிதத்துடன் வலம் வரும் மூணார் ரமேஷ், இயக்குநர் தமிழ், ஸ்மார்ட்டான போலீஸ் ஆபிஸராக கெளதம் மேனன், தலமைச் செயலாளராக ராஜீவ் மேனன் அனைவருமே சரியான தேர்வு. வெற்றிமாறனும் அவரது படக்குழுவும் உயிரைக் கொடுத்து உழைத்துள்ளதை ஒவ்வொரு ப்ரேமிலும் பார்க்க முடிகிறது. விடுதலை திரைப்படம் நிச்சயமாக தமிழ் சினிமாவில் இயக்குநர் வெற்றிமாறனின் இன்னொரு மணிமகுடம் எனலாம்.
எதிர்பார்ப்பில் இரண்டாம் பாகம்
விடுதலை முதல் பாகம் முடியும் போதே, இரண்டாம் பாகத்திற்கு சில லீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்தால் முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகம் இன்னும் தரமான படைப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் திரையரங்கில் இருந்து வெளியேறினர்.