மும்பை: ஸ்பைடர்மேனாக நடித்து வரும் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்து வரும் ஜெண்டயா இருவரும் இந்தியா வந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.
2016ம் ஆண்டு வெளியான கேப்டன் அமெரிக்க சிவில் வார் படத்தில் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் டாம் ஹாலண்ட்.
மார்வெல் தயாரிப்பில் உருவான ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் படத்தில் தனி ஹீரோவாக ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கினார். அவருக்கு ஜோடியாக ஜெண்டயா நடித்திருந்தார்.
புது ஸ்பைடர்மேன்
டாபி மார்குயிர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் உள்ளிட்ட நடிகர்கள் ஸ்பைடர்மேனாக நடித்து அசத்தி வந்த நிலையில், கடந்த 2016ம் ஆண்டு முதல் புது இளம் ஸ்பைடர்மேனாகவும் பீட்டர் பார்க்கராகவும் நடித்து கலக்கி வருகிறார் டாம் ஹாலண்ட். அவெஞ்சர்ஸ் படங்களில் ஸ்பைடர்மேனாக நடித்த டாம் ஹாலண்ட் கடந்த 2021ம் ஆண்டு வெளியான ஸ்பைடர்மேன் நோவே ஹோம் படத்தில் டாபி மார்குயிர், ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் உடன் இணைந்து மிரட்டி இருந்தார்.
ஹீரொயினுடன் காதல்
ஸ்பைடர்மேன் ஹோம் கம்மிங் படத்தில் ஜோடியாக இணைந்து நடித்த டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா இருவருக்கும் ஒரே வயதாகும் நிலையில், இருவரும் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இணைந்து நடித்து வரும் நிலையில், காதலர்களாக மாறி விட்டனர். எங்கே சென்றாலும் இருவரும் இணைந்து செல்லும் டேட்டிங் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா வந்த ஸ்பைடர்மேன் ஜோடி
இந்நிலையில், தங்கள் காதலை மேலும் ஒரு முறை நிரூபிக்கும் வகையில் மும்பை விமான நிலையத்திற்கு டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா வந்திறங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
திருமணத்திற்கான இடம் தேடுகின்றனரா
ஜெய்ப்பூரில் பிரபலங்களின் திருமணங்கள் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவுக்கு வருகை தந்த ஜெண்டயா மற்றும் டாம் ஹாலண்ட் இருவரும் தங்கள் திருமணத்துக்கான இடத்தை பார்க்க வந்திருக்கின்றனரா என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
நீதா அம்பானி அழைப்பு
அம்பானி மனைவி நீதா அம்பானி சார்பில் நடைபெற உள்ள cultural centre launch நிகழ்ச்சிக்காகத் தான் டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டயா மும்பை வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக ஆஸ்கர் மேடையில் அறை கொடுத்து விட்டு இந்தியாவுக்கு அமைதியை தேடி வில் ஸ்மித் வந்த நிலையில் தற்போது ஹாலிவுட் பிரபலங்களின் இந்திய வருகை ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.