பரபரப்பான கோவை மாவட்டத்தில், போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அருகே யார் செல்கிறார், எதிரில் யார் வருகிறார் என்று பார்க்கக் கூட நேரமில்லாமல் மக்கள் சாலைகளில் வேகமாகப் பறந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் ஓர் இளம் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராகக் களத்தில் இறங்கி ஒட்டுமொத்த கோவை வாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஆன்லைனிலும், ஆஃப்லைனிலும் இப்போது அவர்தான் ட்ரெண்டிங்.
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. வயது 24. டிப்ளோமா இன் ஃபார்மஸி படிப்பை முடித்துள்ளார். ஆனால் டிரைவிங் மீதுள்ள ஆர்வத்தால் அந்தத் துறையை உதறித் தள்ளிவிட்டு, டிரைவிங்கில் கவனம் செலுத்தினார். முறையாக டிரைவிங் கற்ற ஷர்மிளா, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றார்.
பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பது அவரின் கனவு. இருப்பினும் அந்த வாய்ப்பு அவருக்கு உடனடியாகக் கிடைக்காததால், தந்தை மகேஸின் ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் தனியார் பேருந்து நிறுவனம் அவருக்கு ஓட்டுநராகும் வாய்ப்பை வழங்கியுள்ளது. காந்திபுரம் டு சோமனூர் வழித்தடத்தில், அவர் முதல் நாள் ஓட்டுநராகக் களத்தில் இறங்க, மக்கள் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்து, பாராட்டி, செஃல்பி எடுத்து வருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதுகுறித்து ஷர்மிளா கூறுகையில், “எனக்கு 7-ம் வகுப்பில் இருந்தே டிரைவிங் மீதுதான் விருப்பம். நேரம் கிடைக்கும்போது அப்பாவின் ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருந்தேன்.
கோவை மாவட்டத்தின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்ற என்னுடைய மற்றும் என் பெற்றோரின் கனவு நிறைவேறியுள்ளது. ஏளனமாகப் பேசியவர்கள் கூட இன்று ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள். தண்ணீர், பழச்சாறு வாங்கிக் கொடுத்து, ’கவனமாகச் செல்லுங்கள்’ என்று வாழ்த்திச் செல்கின்றனர். மகிழ்ச்சியாக உள்ளது.
டிரைவிங் என்றாலே ஆண்கள் கோலோச்சும் துறை இது. இதில் ஒரு பெண்ணாக ஓட்டுநர் ஆனதையே பெரிய விஷயமாக பார்க்கிறேன். எல்லோரும் நன்றாக பார்த்துக் கொள்வதால் எந்தக் கடினமும் இல்லை” என்றார்.