டொரான்டோ, னடாவில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற போது, செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் மூழ்கி, இந்தியர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர்.
அமெரிக்காவுக்கு, அதன் அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடாவில் இருந்து ஏராளமானோர் சட்ட விரோதமாக செல்கின்றனர்.
இதைத் தடுக்க, அமெரிக்கா தன் எல்லைகளில் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது. இருந்தும், சட்டவிரோதமாக நுழைய முயல்வோர், விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன.
இந்நிலையில் நேற்று, வட அமெரிக்க நாடான கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு, செயின்ட் லாரன்ஸ் ஆற்றில் சிலர் படகில் சென்றனர். அப்போது ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில், நீரில் மூழ்கி இரண்டு குழந்தைகள், இந்தியர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர். மேலும், காணாமல் போன ஒருவரை தேடி வருகின்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
இரண்டு குழந்தைகள் உட்பட, எட்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. செயின்ட் லாரன்ஸ் ஆற்றின் சதுப்பு நிலப் பகுதியில் இந்த உடல்களை கண்டெடுத்தோம்.
இந்தியா மற்றும் ருமேனியா நாடுகளைச் சேர்ந்த இரு குடும்பங்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.