DA Hike: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்துவதாக கடந்த மார்ச் 25ஆம் தேதி அறிவித்தது.
மேலும், இந்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல், செலுத்த வேண்டிய கூடுதல் தவணையை அளிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் 47.58 லட்சம் ஊழியர்களும், 69.76 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள். அகவிலைப்படியின் கூடுதல் தவணையை வெளியிட அமைச்சரவை கூட்டத்தில் மார்ச் 25ஆம் தேதி முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து, மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய அடுத்த நாளே (மார்ச் 26) அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசும், ராஜஸ்தான் மாநிலத்தில் தங்களது அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்புவிடுத்தது. அந்த வகையில், ராஜஸ்தானை அடுத்து மற்றொரு மாநில அரசும் தனது அகவிலைப்படியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
அசாம் அரசு அறிவிப்பு
அசாம் மாநிலத்தில் நேற்று (மார்ச் 31) மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனவரி 1, 2023 முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்தது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கேசப் மஹந்தா, “நாங்கள் அகலவிலைப்படியை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். அசாம் அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் மத்திய அல்லது மாநில என அனைத்து ஊழியர்களுக்கும் அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தின் தற்போதைய விகிதமான 38 சதவிகிதத்தை விட கூடுதல் தவணை 4 சதவிகிதம் அதிகரிக்கும்.
ஓய்வூதியதாரர்களும் இந்த அகவிலைப்படி உயர்வால் பயனடைவார்கள். உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்காக மாதந்தோறும் கூடுதலாக ரூ.79.57 கோடியை மாநில அரசு செலவிடுவோம். பிஹு பண்டிகையை கொண்டாடுவதற்கு மாநிலம் தயாராகும் முன் ஏப்ரல் 10ஆம் தேதி அனைத்து ஊழியர்களும் மூன்று மாதங்களுக்கு மேம்படுத்தப்பட்ட அகவிலைப்படியை பெறுவார்கள்,” என்றார்.
வடகிழக்கில் ஆதிக்கம்!
மேலும், 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1,000 மெகாவாட் சூரிய ஒளி மின் நிலையத்தை அமைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது. “இது ஆண்டுக்கு 1,988 மெகா யூனிட் ஆற்றலை உருவாக்கும், இது மத்திய அரசின் கிழக்குக் கொள்கையை விரைவுபடுத்தும்” என்று மஹந்தா கூறினார். அசாம் மாநிலத்தில் தற்போது ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது.
மேலும், வடகிழக்கு மாநிலங்களில் பாஜக தனது ஆட்சிப்பரப்பை நீட்டித்து, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டு முனைகிறது என்றும் இதில், ஹிமந்தா பிஸ்வா சர்மா பாஜகவின் திட்டத்திற்கு மூளையாக செயல்படுகிறார் எனவும் கூறப்படுகிறது.