சீனிவாசப்பூர் :சீனிவாசப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் குமார், ம.ஜ.த., வேட்பாளர் வெங்கட் ஷிவா ரெட்டி ஆகிய இருவருமே, தங்களுக்கு இது தான் கடைசி தேர்தல் என வாக்காளர்கள் மத்தியில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் தொகுதியில் 1983 லிருந்து நடந்த சட்டசபை தேர்தலில், ஜனதா கட்சியிலிருந்து இரு முறையும், காங்கிரசிலிருந்து மூன்று முறையும் ரமேஷ் குமார் வென்றார்.
காங்கிரசிலிருந்து மூன்று முறையும், ஜனதா தளத்திலிருந்து ஒரு முறையும் வெங்கட் ஷிவா ரெட்டி வென்றார். இது வரை ஒன்பது தேர்தல்களில் மோதி உள்ளனர். இதில், ரமேஷ்குமார் ஐந்து முறையும், வெங்கட்சிவா ரெட்டி நான்கு முறையும் எம்.எல்.ஏ., ஆகி உள்ளனர்.
நடக்க உள்ள தேர்தலிலும் இவர்கள் போட்டியிடுவர் என தெரிகிறது. இத்தொகுதியில் ம.ஜ.த., வேட்பாளராக வெங்கட் ஷிவா ரெட்டி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தல் தான் கடைசி தேர்தல் என இருவரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த தேர்தலில் தோல்வி அடைந்த கோலார் மாவட்ட பா.ஜ., தலைவரான டாக்டர் வேணுகோபால், மீண்டும் போட்டியிட சீட் கேட்கவில்லை என்றும், மாறாக கட்சி யாரை வேட்பாளராக அறிவிக்கின்றதோ அவரை வெற்றி பெற செய்யப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தொகுதியில், பா.ஜ.,வில் போட்டியிட சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த சீனிவாச ரெட்டி, மஞ்சுநாத் என இருவர் முயற்சித்து வருகின்றனர்.
இவர்களில் சீனிவாச ரெட்டி காங்கிரசின் முனியப்பா, அமைச்சர் சுதாகருடன் நெருக்கமாக உள்ளார். இங்கு ரெட்டி சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதால், அவர்கள் சார்ந்தவருக்கு சீட் வழங்கலாம் என பேச்சு உள்ளது.
மற்றொருவரான மஞ்சுநாத், சீனிவாசப்பூர் தாலுகா அலுவலகம் அருகில் இரண்டு மாதங்களாக மதியம் வேளையில் அன்னதானம் வழங்கி வருகிறார். இவர் பா.ஜ., செயல்வீரராக உள்ளார்.
காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் குமார், மூன்று மாதங்களாகவே ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று அரசு நலத்திட்டங்கள், பயனாளிகளுக்கு கிடைத்ததா என்று கேட்டு வருகிறார். மக்கள் மத்தியில் தலை காட்டினார்.
ம.ஜ.த., வெற்றி பெற உள்ள தொகுதி பட்டியலில் இதுவும் ஒன்று. இதனால், அக்கட்சி மேலிடம் முக்கியத்துவம் அளித்து வருகிறது.