நியூயார்க், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூரால், இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டு, அமெரிக்காவின் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள 15 பழங்கால சிலைகளை திரும்ப ஒப்படைக்க, அந்நாடு முடிவு செய்துஉள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்த பிரபல சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூர், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்த பழமையான சிலைகளை திருடி வெளிநாட்டு அருங்காட்சியகங்களுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்தார்.
இது குறித்து புகார் எழுந்ததை அடுத்து, தமிழக கோவில் சிலையை கடத்திய வழக்கில், சுபாஷ் கபூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரால், சட்டவிரோத மாக விற்கப்பட்ட பழங்கால சிலைகள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, இவற்றை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது.
இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நியூயார்க் உச்ச நீதிமன்றம், இந்தியாவுக்கு சொந்தமான 15 சிலைகளை திரும்ப ஒப்படைக்க நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இது குறித்து நியூயார்க் அருங்காட்சியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்ட விரோதமாக வழங்கப் பட்ட பொருட்களை அருங்காட்சியகத்தில் வைப்பது குற்றமாகும். சுபாஷ் கபூரால் விற்கப்பட்ட இந்த சிலைகள், செம்பு, கல், டெரகோட்டா போன்றவற்றால் உருவாக்கப்பட்டவை.
இந்த சிலைகளின் மதிப்பு 9.87 கோடி ரூபாயாகும். இவற்றை இந்தியாவுக்கு திரும்ப ஒப்படைப்பதன் வாயிலாக இரு நாட்டு உறவு மேலும் வளரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.