சென்னை: இந்தியா – இலங்கை இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்றும், மாநில நெடுஞ்சாலைகளின் 3 இடங்களில் சாலையோர வசதி மையங்கள் அமைக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.1) பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதற்கு பதில் அளித்து பேசிய பிறகு அமைச்சர் எ.வ.வேலு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம்:
“உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.1093 கோடி ஒதுக்கீடு. இதில் 1 புறவழிச்சாலை, 23 சாலைகள் அகலப்படுத்துதல், 5 ஆற்றுப் பாலங்கள், 14 சிறுபாலங்கள், 9 இடங்களில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படும்.
முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில், 3 இடங்களில் சாலைப் பயனாளர்களுக்காக “சாலையோர வசதி மையங்கள்” அமைக்கப்படும். இதில் ஓட்டுனர்கள் மற்றும் பயணிகள் ஓய்வு அறை, உணவகம், எரிபொருள் மையம், சாலை பாதுகாப்பு பூங்கா, விளையாட்டு அரங்கம், வாகனம் பழுது பார்க்கும் வசதி ஆகியவைகள் இருக்கும்.
ஆறு வழிச்சாலை மற்றும் அதிவேக சாலை உள்ளிட்ட பல்வேறு சாலை பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கப்படும். இதற்கான சட்ட முன் வடிவு தயார் செய்யப்படும்.
“பள்ளங்களற்ற சாலை” இலக்கை அடைய கைப்பேசி செயலி (Mobile App) உருவாக்கப்படும். பொதுமக்கள் இதில் பதிவு செய்யும் சாலை பள்ளம் தொடர்பான புகைப்படங்கள் ஆய்வு செய்து, மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரத்திலும், மாவட்ட சாலைகளில் 72 மணி நேரத்திலும் பள்ளங்கள் சரி செய்யப்படும்.
சாலையில் சீரற்ற தன்மை இணைய ஆய்வு வாகனம் (Net Survey Vehicle) மூலம் சோதனை செய்யப்படும். இதுபோன்ற சோதனைகள் செய்த பிறகு தான் பணி நிறைவுச் சான்றிதழ் வழங்கப்படும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டை ஒட்டி மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 5 இலட்சம் மரக்கன்றுகள் நடப்படும். மேலும் மண் அரிப்பை தடுக்க பனை விதைகள் நடப்படும். 12,191 கிமி நீள நெடுஞ்சாலைகளில் நில எல்லை அளவு (Right of Way Details) மற்றும் மரங்கள், சாலை உபகரணங்கள் உள்ளிட்ட சொத்துக்களின் (Assets) விவரங்கள் கணினிமயமாக்கப்படும். ரூ.22.80 கோடியில் மதுரை அலங்காநல்லூரில் கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு அரங்கிற்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படும்.
முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (CMRDP) கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் 2,200 கிமீ நான்கு வழித் தட சாலையாகவும், 6,700 கி.மீ 2 வழித்தட சாலையாகவும் அகலப்படுத்தப்படும். இந்த ஆண்டில் 13.30 கி.மீ. நீள ஈரோடு வெளிவட்ட சுற்றுச் சாலை உள்ளிட்ட 200 கி.மீ சாலைகள் நான்கு வழித்தடமாகவும், 600 கி.மீ. சாலைகள் இருவழித்தடமாகவும் அகலப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் புதிதாக ரூ.215 கோடியில் ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும். 3 மாவட்டங்களில் ஆற்றுப் பாலங்கள் அமைக்க ரூ.29 கோடியில் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2 ஆற்றுப் பாலங்கள் கட்ட விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
துறையூர், திருப்பத்தூர், நாமக்கல் ஆகிய 3 நகரங்களுக்கு ரூ.286 கோடியில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். தருமபுரி, செந்துறை நகரங்களுக்கு புறவழிச்சாலைகள் அமைக்க ரூ.36 கோடி மதிப்பில் நில எடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னிமலை, கறம்பக்குடி, அபிராமம், போளூர், ஜெயங்கொண்டாம், கள்ளக்குறிச்சி, வத்திராயிருப்பு, மல்லாங்கிணறு ஆகிய 8 நகரங்களுக்கு புற வழிச்சாலை அமைக்க ரூ.1.50 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.
சாலை பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு ரூ.150 கோடியில் சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். மலைப்பகுதிகளில் உள்ள வளைவுகளில் உருளை விபத்து தடுப்பான்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்படும்.
“அனைத்து காலநிலைகளிலும் தங்கு தடையற்ற போக்குவரத்து” என்ற திட்டத்தின் கீழ் 29 மாவட்டங்களில் 200 தரைப்பாலங்கள் ரூ.300 கோடியில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும். கடன் உதவி பெற்று 20 மாவட்டங்களில் 73 தரைப்பாலங்கள் ரூ.487 கோடியில் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்.
இந்தியா – இலங்கை இடையில் குறைந்த தூர பயணிகள் கப்பல் போக்குவரத்தை தொடங்க, ராமேஸ்வரம் – தலைமன்னார், ராமேஸ்வரம் – காங்கேசந்துறை ஆகிய வழித்தடங்களில் தொடங்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும்.