சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரேபிட்டோ போன்ற வாடகை வாகன ஓட்டிகள் மீது சில ஆட்டோ ஓட்டுநர்கள் கற்களை வீசி தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது.
ஆட்டோ கட்டணத்தைவிட குறைவான கட்டணம் வசூலிப்பதால் பலர் ரேபிட்டோ போன்ற வாடகை வாகனங்களை விரும்புகிறார்கள். இதன் காரணமாக ஆட்டோ ஓட்டுநர்களின் வருமானம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக வாடகை வாகன ஓட்டிகளுக்கும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே மோதல் போக்கு காணப்படுகிறது.
தங்கள் வருமானம் குறைந்து போக வாடகை வாகன ஓட்டிகள் தான் காரணம் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில், “கடந்த 2013-ம் ஆண்டு ஆட்டோரிக்ஷா கட்டணம் திருத்தப்பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆட்டோ கட்டணத்தை திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குறைந்த கட்டணம்
இணை ஆணையர் தலைமையில் அரசு குழு அமைத்தது. மே 12-ம் தேதி தொழிற்சங்கங்கள் மற்றும் பயணிகள் சங்கத்தின் கருத்துகளை கேட்டறிந்தனர். பின்னர் ஆலோசனையை தொடர்ந்து, கட்டண திருத்தம் குறித்து போக்குவரத்து துறை மௌனம் காத்து வருகிறது. இப்போது குறைந்தபட்சக் கட்டணம் ரூ.50 ஆகவும், கிலோ மீட்டருக்கு ரூ.25 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும். தற்போது முதல் 1.8 கி.மீ.க்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆகவும், கூடுதல் கி.மீ.க்கு ரூ.12 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது” என ஆட்டோ ஓட்டுநர்கள் கூறினார்கள்

ஆப் வேண்டும்
எங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பைக் டாக்ஸிகளையும் தடை செய்ய வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். டெல்லி மற்றும் மகாராஷ்டிரா அரசு பைக் டாக்ஸிகளுக்கு தடை விதித்துள்ளது. தமிழக அரசும் அதை செய்ய வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் கூறி வருகின்றனர். நல வாரியத்தின் நிதியில் அரசு சொந்தமாக ஓலா, உபேர் போன்று ரைடு-ஹைலிங் செயலி வெளியிட வேண்டும் என ஆட்டோரிக்ஷா ஓட்டுனர்கள் சங்கங்கள் அரசுக்கு தொடர்ந்த கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

எடுங்கடா வண்டிய
இந்நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ரேபிட்டோ போன்ற வாடகை வாகன ஓட்டிகள் தங்கள் வாகனத்தை நிறுத்துவதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நேற்று இரவு கோயம்பேடு பகுதியில் வாடகை கார், இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் மீது சில ஆட்டோ ஓட்டுநர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். எடுங்கடா வண்டிய என்று கூறியதுடன், ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்ததாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

போலீசிடம் புகார்
இந்த வீடியோ பதிவுடன் 50ம் மேற்பட்ட ரேபிட்டோ போன்ற வாடகை வாகன ஓட்டிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். ரேபிட்டோ போன்றவாடகை இருசக்கர வாகன ஓட்டிகளான அவர்கள் மாதவரம், கோயம்பேடு, எழும்பூர், சென்டரல், விமான நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் பயணிகளை ஏற்றி இறக்குகிறார்கள். இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை இவர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அதிக அளவில் செயல்படுகிறார்கள். இவர்கள் பயணிகளை ஏற்றுவதை பார்க்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் அடிக்கடி சண்டைக்கு வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அவர்கள் காவல் ஆணையரிடம் புகாராக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.