திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோயில்களில் மூலவர்கள் மற்றும் உற்சவர்களுக்கு பயன்படுத்தப்படும் பலடன் மலர் மாலைகள் வீணாகின்றன. இதைத் தடுக்க தேவஸ்தான நிர்வாகம் ஊதுபத்தி தொழிற்சாலையை தொடங்கியது. சுவாமிக்கு பயன்படுத்திய மலர்களின் இதழ்களை பிரித்து அவைகளை உலர வைத்து, ரசாயனம் கலந்து விதவிதமான நறுமணம் கொண்ட ஊதுபத்திகளை தயாரித்து பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
இதற்கு பக்தர்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. தற்போது இந்த ஊதுபத்திகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால், 2-வது தொழிற்சாலையை தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, ஸ்ரீவெங்கடேஸ்வரா கோசாலையில் 2-வது ஊதுபத்தி தொழிற்சாலையை தேவஸ்தான அறங்காவலர் சுப்பா ரெட்டி, நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் திறந்து வைத்தனர்.
அப்போது சுப்பாரெட்டி பேசும்போது, “கடந்த 2021-ம் ஆண்டு தேவஸ்தான ஊதுபத்தி தயாரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனை தயாரித்து கொடுக்க பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தர்ஷன் ஊதுபத்தி நிறுவனம் முன்வந்தது. இவர்களுக்காக இடம் ஒதுக்கி தரப்பட்டது. இதன் மூலம் நிறைய பெண்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இதுவரை ரூ.30.66 கோடி ஊதுபத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தினமும் திருப்பதியில் 1500 பாக்கெட்கள் தயாரிக்கப்படுகின்றன. கிராக்கி அதிகரித்துள்ளதால், தற்போது மேலும் தினசரி 1500 ஊதுபத்தி பாக்கெட்கள் தயாரிக்க ஏதுவாக 2-வது தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் பல பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.