திருச்செந்தூர்: ஏற்கனவே முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம் அவர் பாரதிய ஜனதா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். இல்லையென்றால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு அவருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜூன் சம்பத் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஒருபக்கம் கடுமையான சட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் ஓபிஎஸ் மேல் முறையீடு செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஏற்றுக்கொள்ள வேண்டும்
ஓ பன்னீர் செல்வம் அரசியல் ரீதியாக சற்று பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர்செல்வம் ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜூன் சம்பத் கூறியதாவது:- அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஓ பன்னீர்செல்வம் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா வென்ற போது
ஏற்கனவே முதல் அமைச்சராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம். அவர் பாரதிய ஜனதா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். இல்லையென்றால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு அவருடன் இணைந்து செயல்பட வேண்டும். அதிமுக பொது செயலாளராக ஜெயலலிதா வென்ற போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி கட்சியை விட்டு கொடுத்து சென்றார். இதே மாதிரி எடப்பாடி பழனிசாமியை வெற்றியை ஏற்றுக்கொண்டு ஓ பன்னீர் செல்வம் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம்
தமிழ்நாட்டில் கல்வி தொழில் வேலைவாய்ப்புகளில் தென் மாவட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நிர்வாகம், வளர்ச்சி ஆகியவை கணக்கில் கொண்டு தென் மாவட்டங்களை ஒருங்கிணைத்து ஒரு மாநிலமாகவும் கொங்கு மண்டலத்தை ஒருங்கிணைத்து மற்றொரு தனி மாநிலமாகவும் உருவாக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் அரசினுடைய நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதாக சென்று சேரும்.
வன்கொடுமை தாக்குதல்
பிரதமர் மோடி தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார். தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணமலை திமுக அமைச்சர்களின் லஞ்ச ஊழல் பட்டியலை வெளியிட்டால் மட்டும் போதாது. சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு கொடுக்கும். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை இழிவாக பேசிய ராகுல் காந்தியை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பட்டியலின மக்கள் மீது வன்கொடுமை தாக்குதல் நடந்து வருகிறது. வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.