தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்து உள்ள அமரம்பேடு கிராமம், பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோகுலகண்ணன் (32). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு லோகப்பிரியா என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில், கடந்த 27-ம் தேதி லோகப்பிரியா வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக சோமங்கலம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லோகப்பிரியாவின் உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் லோகப்பிரியாவின் மரணம் குறித்து போலீசா விசாரித்தனர். விசாரணையில் லோகப்பிரியா தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து மணிமங்கலம் உதவி கமிஷனர் ரவி தலைமையில் போலீசார் லோகப்பிரியாவின் கணவர் கோகுலகண்ணன், மாமியார் ராஜேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் லோகப்பிரியா கொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கோகுலகண்ணனுக்குத் திருமணம் செய்ய அவரின் குடும்பத்தினர் பெண் பார்த்துவந்தனர். அப்போது கோகுலகண்ணனின் வழுக்கை தலை காரணமாக அவருக்குப் பெண் கொடுக்க பலரும் முன்வரவில்லை. அதனால் கோகுலகண்ணன், தன்னுடைய வழுக்கைத் தலையை விக் மூலம் மறைத்தார்.
லோகப்பிரியாவைப் பெண் பார்க்கும்போதுகூட கோகுலகண்ணன், தனக்கு வழுக்கைத் தலை என்று உண்மையைச் சொல்லவில்லை. திருமணத்தின்போது பந்தாவாக விக்கை வைத்து லோகப்பிரியாவையும் அவரின் குடும்பத்தினரையும் கோகுலகண்ணன் ஏமாற்றி உள்ளார். கோகுலகண்ணனுக்குத் திருமணம் முடிந்து சில தினங்களுக்குப் பிறகு தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மனைவி லோகப்பிரியா, எண்ணெய் தேய்க்க முயன்றபோது கோகுலகண்ணன் மறுத்திருக்கிறார்.
அப்போது கோகுலகண்ணன் வெட்கப்படுவதாக லோகப்பிரியாவும் அவரின் குடும்பத்தினரும் எண்ணி உள்ளனர். ஆனால், உண்மையை பல நாள்கள் மறைக்க முடியாது என்பதுபோல, கோகுலகண்ணனின் வழுக்கைத் தலையை ஒருநாள் லோகப்பிரியா பார்த்துவிட்டார். அதனால் மனமுடைந்த லோகப்பிரியா, ‘ஏன் உண்மையை மறைத்துவிட்டீர்கள்?’ என்று கோகுலகண்ணனிடம் கேட்டிருக்கிறார். அதற்கு கோகுலகண்ணன் ‘நீங்கள் வாக்குறுதி அளித்தபடி வரதட்சணையாக நகைகளைக் கொடுக்காமல் என்னை ஏமாற்றிவிட்டீர்கள்’ என லோகப்பிரியாவிடம் சண்டை போட்டிருக்கிறார்.
மேலும், கோகுலகண்ணன் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், அதுவும் உண்மையில்லை என லோகப்பிரியாவுக்குத் தெரியவந்திருக்கிறது. இதனால் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்திருக்கிறது. சம்பவத்தன்று ஆத்திரமடைந்த கோகுலகண்ணன், மனைவி லோகப்பிரியாவைத் தாக்கி உள்ளார். இதில் அவர் உயிரிழந்துவிட்டார். அதனால் அதிர்ச்சியடைந்த கோகுலகண்ணன், லோகப்பிரியா உயிரிழந்த தகவலை தன்னுடைய அம்மா ராஜேஸ்வரியிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, இருவரும் சேர்ந்து கொலையை மறைக்க, லோகப்பிரியா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாட முடிவுசெய்திருக்கிறார்கள். அதற்காக லோகப்பிரியாவின் உடலை வீட்டில் தூக்கில் தொங்கவிட்டிருக்கிறார்கள். ஆனால், லோகப்பிரியாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் லோகப்பிரியாவின் பிரேத பரிசோதனை அறிக்கையும் வந்தது. இதையடுத்தே கோகுலகண்ணன், அவரின் அம்மா ராஜேஸ்வரி ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.