பெங்களூரு, ஏப். 1- கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கட்சி தாவல் ஜரூராக நடக்கிறது. பா.ஜ., – ம.ஜ.த.,வின் எம்.எல்.ஏ.,க்கள் இருவர், நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இவர்கள், காங்கிரசில் இணைய திட்டமிட்டுள்ளனர். கருத்து கணிப்பில் காங்கிரஸ் கை ஓங்குவதால், மற்ற கட்சிகளின் முக்கிய தலைவர்கள் அங்கு ஓட்டம் எடுக்கின்றனர்.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில், பா.ஜ., அரசு நடக்கிறது. இந்த அரசின் பதவிக்காலம், மே 24ம் தேதி முடிகிறது. 224 உறுப்பினர்களை கொண்ட, கர்நாடக சட்டசபைக்கு மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது.
ஆட்சியை தக்க வைக்க, பா.ஜ.,வும்; தட்டிப் பறிக்க காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகளும் நினைக்கின்றன. காங்கிரஸ் 124 தொகுதிகளுக்கு, முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
மாநில கட்சியான ம.ஜ.த.,வும், 93 தொகுதிகளுக்கு முதல் கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அந்த கட்சியும் இரண்டாம் கட்ட பட்டியலை வெளியிட ஆயத்தமாகி வருகிறது. ஆனால், ஆளும் பா.ஜ., மட்டும் இன்னும், வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் உள்ளது.
வெற்றி வாய்ப்பு
பசவராஜ் பொம்மை அரசை, 40 சதவீத கமிஷன் அரசு என்று, காங்கிரஸ் கடுமையாக விமர்சித்து வருகிறது.
பா.ஜ., ஆட்சியின் போது, எஸ்.ஐ., தேர்வு முறைகேடு, ஆசிரியர் தேர்வு முறைகேடு, மாடால் விருபாக் ஷப்பா எம்.எல்.ஏ., லஞ்ச வழக்கில் கைதானது உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தன.
அத்துடன், வளர்ச்சி பணிகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருப்பதால், பா.ஜ., மீது மக்களுக்கு, அதிருப்தி உள்ளது. அதே நேரம், காங்கிரசுக்கு சாதகமான அலை வீசுகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று, பல்வேறு கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
இதனால், பா.ஜ., – ம.ஜ.த., கட்சிகளை சேர்ந்த, எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் பலர், காங்கிரசில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசி வருகின்றனர். பா.ஜ.,வில் எம்.எல்.சி.,யாக இருக்கும் விஸ்வநாத், காங்கிரசில் இணைய இருப்பதாக, பகிரங்கமாக அறிவித்து விட்டார்.
குப்பி சீனிவாஸ்
பா.ஜ., – எம்.எல்.சி.,க்களாக இருந்த புட்டண்ணா, பாபுராவ் சிஞ்சன்சுர் ஆகியோர், எம்.எல்.சி., பதவியை ராஜினாமா செய்து விட்டு, காங்கிரசில் இணைந்து விட்டனர். ம.ஜ.த., – எம்.எல்.ஏ.,வாக இருந்த, குப்பி சீனிவாஸ் ராஜினாமா செய்துவிட்டு, நேற்று முன்தினம் காங்கிரசில் இணைந்தார்.
‘பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வில் அதிருப்தியில் இருக்கும், எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் தொடர்ந்து இணைவர்’ என்று, மாநில தலைவர் சிவகுமார் கூறி வருகிறார். இந்நிலையில், நேற்று மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
பல்லாரி மாவட்டம், கூட்லகி தொகுதி பா.ஜ., – எம்.எல்.ஏ., கோபால கிருஷ்ணா, 73, நேற்று சிர்சியில் சபாநாயகர் காகேரியை சந்தித்து, ராஜினாமா கடிதம் கொடுத்தார். ஹாசன் மாவட்டம், அரகலகூடு ம.ஜ.த., – எம்.எல்.ஏ., ராமசாமி, 71 பெங்களூரு விதான் சவுதாவில், சட்டசபை செயலர் விசாலாட்சியிடம், தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
ஒரே நாளில் இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா செய்து இருப்பது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாற்று வேட்பாளர்
கோபால கிருஷ்ணா, முன்பு காங்கிரசில் இருந்தார். 1997, 1999, 2004, 2008 தேர்தல்களில், சித்ரதுர்காவின் மொலகால்மூருவில் வெற்றி பெற்றார். ஒரு முறை பல்லாரி தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 2018 தேர்தலில் மொலகால்மூருவில் காங்கிரஸ் அவருக்கு சீட் தரவில்லை.
அதிருப்தி அடைந்த அவர், பா.ஜ.,வில் இணைந்து மொலகால்மூருவில் ‘சீட்’ கேட்டார். ஆனால் கூட்லகி தொகுதி கிடைத்தது. அங்கு வெற்றி பெற்றார். வரும் தேர்தலில் அவருக்கு, ‘சீட்’ கொடுக்க பா.ஜ.,வில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் அவருக்கு பதிலாக, மாற்று வேட்பாளர் தேடப்பட்டு வந்தார். இதையறிந்த அவர் ராஜினாமா செய்து உள்ளார்.
ம.ஜ.த., மூத்த தலைவரான ராமசாமி, அரகலகூடு எம்.எல்.ஏ.,வாக நான்கு முறை இருந்தார். குமாரசாமி மீதான அதிருப்தியால், சில மாதங்களாக ம.ஜ.த., வில் இருந்து, ஒதுங்கியே இருந்தார்.
சட்டசபையில் சிறப்பாக பேசும், எம்.எல்.ஏ., என்று அறியப்பட்டவர். சில தினங்களுக்கு முன், ம.ஜ.த.,வின் அரகலகூடு வேட்பாளராக, பா.ஜ.,வில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் மஞ்சுவை தலைமை அறிவித்தது. இதனால் கோபம் அடைந்த அவர், பதவி விலகியுள்ளார்.
ராஜினாமா ஏன்?
கோபால கிருஷ்ணா: எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ததற்கு, எந்த காரணமும் இல்லை. எனக்கு வயதாகி விட்டது. முன்பு போல பணியாற்ற முடியவில்லை. பா.ஜ., மீது வருத்தம் இல்லை. புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதவியை ராஜினாமா செய்து உள்ளேன்.பா.ஜ.,வில் தற்போது அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களாக இருக்கும் யாருக்கும் ‘சீட்’ உறுதி இல்லை. முன்பு காங்கிரசில் இருந்த போது, நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. பதவி மீது ஆசைப்பட்டது இல்லை. அமைச்சர் ஆவதற்கு அதிர்ஷ்டம் வேண்டும். வேறு கட்சியில், இணையும் எண்ணமும் இல்லை. ஓய்வு எடுக்க நினைக்கிறேன்.ராமசாமி: எம்.எல்.ஏ., பதவியை மகிழ்ச்சியாக, ராஜினாமா செய்து உள்ளேன். எனக்கு வாய்ப்பு அளித்த, ம.ஜ.த.,வுக்கு நன்றி. தனிப்பட்ட நலனுக்காக, நான் அரசியல் செய்தது இல்லை. மக்களுக்காக பணி செய்தேன். என்னை பொறுத்தவரை சரி என்றால் சரி, தவறு என்றால் தவறு தான். யாருக்காகவும், சமரசம் செய்து கொள்ள மாட்டேன்.நான் ம.ஜ.த.,வை விட்டு விலகுகிறேன் என்று, எங்கேயும் சொல்லவில்லை. அவர்கள் தான் என்னை, வெளியேற்றினர். ஊழலுக்கு எதிராக கேள்வி எழுப்பியதால், நான் தண்டிக்கப்பட்டு உள்ளேன். இதனால் அங்கு நீடிக்க முடியாத நிலை உள்ளது. காங்கிரஸ், பா.ஜ.,வில் இருந்து அழைப்பு வருகிறது. யோசித்து அடுத்தகட்ட முடிவு எடுப்பேன்.