கர்நாடகா | பிரதமர் மோடி படத்துக்கு முத்தம் கொடுத்த முதியவர் – சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற மே 10-ம்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இங்கு ஆட்சியை கைப்பற்ற ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மூன்று கட்சிகளை சேர்ந்த முக்கியத் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆளும் பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், கர்நாடகாவில் உள்ள பேருந்து நிலையம் ஒன்றில்நின்றிருக்கும் பேருந்தில் ஒட்டப்பட்டுள்ள பிரதமர் நரேந்திர‌ மோடியின் புகைப்படத்தை முதியவர் ஒருவர்அன்போடு வருடுகிறார். உணர்ச்சிப்பெருக்கோடு மோடியின் கன்னத்தை வருடி முத்தமிடுகிறார்.

உலகை வெல்வீர்கள்: அப்போது அந்த முதியவர், ‘‘முன்பு எனக்கு 1,000 ரூபாய் கிடைத்தது. இப்போது மேலும் 500 ரூபாய் கொடுக்கிறீர்கள். நாங்கள் பசுமை வீட்டில் வாழ வேண்டுமென்று சொன்னீர்கள். எங்கள் வீட்டின் முன்பாகவும் உங்களின் புகைப்படம் இருக்கிறது. எங்களின் ஆரோக்கியத்துக்காக 5 லட்ச ரூபாய் தருவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். நீங்கள் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பெங்களூரு, மைசூரு, தும்கூருவில் மட்டுமல்ல இந்த உலகத்தையே வெல்வீர்கள். உங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது’’ என நெகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்.

இதனை அருகிலுள்ள மக்கள் கண்டு வியப்படைந்தனர். அப்போது முதியவரின் பேத்தி குறுக்கிட்டு அவ‌ரை அழைத்துச் செல்கிறார்.

இந்த வீடியோவை மத்திய அமைச்சர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான பாஜக ஆதரவாளர்களும் பகிர்ந்து, மோடி அரசின் சாதனைகளை பட்டியலிட் டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.