ஹாசன்: கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தள கட்சிக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். கர்நாடக மாநிலத்தில் மே 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்நிலையில்குமார சாமி தலைமையிலான மஜத கட்சிக்கு தொடர்புடைய கூட்டுறவு வங்கிகளில் வருமானவரித்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த கூட்டுறவு வங்கியின் இயக்குனர்களாக முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகன் சூரஜ் ரேவண்ணா இருக்கிறார். இவர் மஜத மேலவை உறுப்பினராக உள்ளார்.
மேலும் மஜத எம்எல்ஏ சி.என்.பாலகிருஷ்ணா, முன்னாள் மஜத மேலவை உறுப்பினர் பாட்டீல் சிவராம் ஆகியோரும் வங்கியின் இயக்குனர்களாக இருப்பதாக எச்டிசிசி இணையதளத்தில் காட்டப்பட்டுள்ளது. இந்த வங்கியில் சோதனை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் சில முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர். வங்கிகளில் போலீசார் பாதுகாப்பு குவிக்கப்பட்டு வங்கி அதிகாரிகளை தவிர வேறு யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த ரெய்டு குறித்து வங்கி அதிகாரிகளோ, ஐடி அதிகாரிகளோ எந்த கருத்தும் கூற மறுத்துவிட்டனர். மஜத கட்சியை நிர்வாகிகளும், பிரமுகர்களும் இது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.