ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நாயக்கன்காடு கண்ணகி வீதியில் வசித்து வருபவர் குமார். இவரது மகள் ஸ்வேதா (21). இவர் கோபியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணினி அறிவியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த 28-ம் தேதி கல்லூரி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு் சென்றவர் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ஸ்வேதாவின் தாய் மஞ்சுளாதேவி தனது மகளை காணவில்லை என்று கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் ஸ்வேதாவை தேடி வந்த நிலையில் ஸ்வேதா நேற்று முன்தினம் மாலை டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் தண்டுமாரியம்மன் கோவில் வீதியில் உள்ள விவசாய தோட்டத்து கிணற்றில் மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் உடலில் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பங்களாப்புதூர் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து ஸ்வேதாவை மர்மநபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து மூட்டையில் கட்டி கிணற்றில் வீசி இருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். மேலும் போலீசார் ஸ்வேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதன் காரணமாக ஸ்வேதாவின் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். அப்போது அவருடன் கல்லூரியில் படித்த கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த வைதேகி – வீருச்சாமி என்பவரின் மகன் லோகேஷ் (23) என்பவர் ஸ்வேதாவை தற்கொலை செய்ய தூண்டியதும், மேலும் அதற்கான தடயங்களை மறைக்க முயன்றதும் தெரியவந்தது.
மேலும் லோகேசிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு, லோகேஷ், ஸ்வேதா படித்த அதே கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது 2 பேருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் லோகேஷ் படித்து முடித்துவிட்டு கோபியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சேர்ந்து பணிபுரிந்து வந்துள்ளார்.
எனினும் லோகேசும், ஸ்வேதாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்துள்ளனர். மேலும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதில் சில மாதங்களுக்கு முன்பு ஸ்வேதா கர்ப்பம் ஆனார். இந்த விஷயம் வீட்டுக்கு தெரிந்தால் விபரீதம் ஆகிவிடும் என ஸ்வேதா பயந்தார். இதனால் அவர் லோகேசிடம் சென்று தன்னை திருமணம் செய்யுமாறு கூறி வற்புறுத்தி வந்துள்ளார். அதற்கு லோகேசும் தனது பெற்றோருக்கு தெரிந்தாலும் பிரச்சினை ஆகிவிடும் என்று கூறி வந்துள்ளார்.
இதனால் ஸ்வேதா கர்ப்பத்தை கலைக்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து கடந்த 28-ம் தேதி காலை தனது வீட்டில் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கருவை கலைக்க சென்றுள்ளார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு் கருவை தற்போது கலைக்க முடியாது என்று கூறியுள்ளனர். இதனால் ஸ்வேதா மனமுடைந்த நிலையில் காணப்பட்டதுடன், தனது வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தார்.
இதுகுறித்து அறிந்த லோகேஷ் காதலி ஸ்வேதாவை மதியம் 3 மணி அளவில் கொங்கர்பாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவரும் அங்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் அங்கு 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது லோகேஷ் உணவு வாங்கி விட்டு வருவதாக ஸ்வேதாவிடம் கூறிவிட்டு வெளியில் சென்று உள்ளார். உணவு வாங்கி விட்டு லோகேஷ் பாட்டி வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்த போது ஸ்வேதா தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் தற்கொலை செய்ததற்கான தடயங்களை மறைக்க எண்ணினார்.
உடனே ஸ்வேதாவின் உடலை ஒரு சாக்கு பையில் போட்டு கட்டி வைத்துள்ளார். பின்னர் அந்த மூட்டையை தனது மோட்டார்சைக்கிளில் எடுத்து சென்று இரவு 9 மணி அளவில் கொங்கர்பாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள விவசாய தோட்டத்து கிணற்றுக்கு சென்று வீசிவிட்டு் வீடு திரும்பி உள்ளார். மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பங்களாப்புதூர் போலீசார் கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டுதல், தடயங்களை மறைத்தல் என 2 பிரிவுகளாக மாற்றி வழக்குப்பதிவு செய்து லோகேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.