கோவையில் ஒரு இளம் பெண் தனியார் பேருந்து ஓட்டுநராகக் களத்தில் இறங்கி ஒட்டுமொத்த கோவை வாசிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் டிப்ளமோ பார்மஸி படித்துள்ள ஷர்மிளா. இவருக்கு டிரைவிங் மீதுள்ள ஆர்வத்தால் அந்தத் துறையை உதறித் தள்ளிவிட்டு, டிரைவிங்கில் கவனம் செலுத்தினார். முறையாக டிரைவிங் கற்ற ஷர்மிளா, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றார். பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பது அவரின் கனவு. இருப்பினும் அந்த வாய்ப்பு அவருக்கு உடனடியாகக் கிடைக்காததால், தந்தை மகேஸின் ஆட்டோவை ஓட்டிக் கொண்டிருந்தார்.இந்நிலையில் தனியார் பேருந்து நிறுவனம் அவருக்கு ஓட்டுநராகும் வாய்ப்பை வழங்கியுள்ளது. காந்திபுரம் டு சோமனூர் வழித்தடத்தில், அவர் முதல் நாள் ஓட்டுநராகக் களத்தில் இறங்க, மக்கள் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்து, பாராட்டி, செஃல்பி எடுத்து வருகின்றனர்.
கனரக வாகன லைசென்ஸ் பெற்று இருந்தபோதும் பஸ் இயக்க வழித்தடம் கிடைக்காமல் இருந்ததாகவும், தற்போது வாய்ப்பு கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஷர்மிளா தெரிவித்தார்.
இது குறித்து பெண் ஓட்டுனர் ஷர்மிளா கூறுகையில், “எனது தந்தை மகேஷ், கோவையில் ஆட்டோ ஓட்டுநர். அவர் எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தார். அவர் ஓட்டும் சமையல் காஸ் சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப்பார்த்து பழகினேன். பஸ் ஓட்டுநராக வேண்டும் என்பது கனவாக இருந்தது. இதனால், கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி பெற்று உரிமமும் பெற்றேன்.ஆண்கள் மட்டுமே அதிகம் இருக்கும் கனரக வாகன ஓட்டுநர் பணியில் தனக்கான முத்திரையை பதிக்க வேண்டும் என்று நினைத்தேன்.
ஏழாவது வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எனக்கு டிரைவிங் மீது ஆர்வம் வந்துவிட்டது. இப்போதுதான் பஸ்சை பேருந்தை கையில் எடுத்திருக்கிறேன். ஆனால், 2019ம் ஆண்டு முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்தேன். அதன்பின், பஸ் ஓட்ட பயிற்சிக்கு செல்ல ஆரம்பித்தபோது நகைப்புடன் ஏளனமாக பார்த்தவர்கள் எல்லாம் இன்று வியப்பாக பார்க்கிறார்கள். ஓட்டுநர் பயிற்சி முடித்ததும் அரசு வேலைக்காக காத்திருக்காமல், தனியார் நிறுவனம் அளித்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டேன்’’ என்றார்.
பஸ்சில் பயணித்த கல்லூரி மாணவி பிரியா என்பவர் கூறுகையில், “வழக்கமாக ஆண்கள் மட்டுமே பஸ் இயக்குவதை பார்த்துள்ளேன். தற்போது, முதல் முறையாக இளம்பெண் ஓட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது. அதே வேளையில், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக ஷர்மிளா திகழ்கிறார். மேலும், ஆண் ஓட்டுனர்களிடம் பேச தயக்கம் இருக்கும். ஆனால், பெண் ஓட்டுனரிடம் எளிதில் அணுகி தங்களுடைய நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம்’’ என்றார்.