"சக்கர வியூகம்".. ஜாதி காய்களை நகர்த்தும் பாஜக.. காங்., எடுக்கும் "பிரம்மாஸ்திரம்".. தகிக்கும் கர்நாடகா

பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் களம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அனல் அடித்து வருகிறது. உண்மையில் சொல்லப்போனால் இது பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் ஒருவிதத்தில் வாழ்வா சாவா தேர்தல்தான். எனவே, கர்நாடகாவை எந்தவிதத்திலும் விட்டுவிடக்கூடாது என்பதில் இரு கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், பாஜக ஜாதி காய்களை வைத்து ஆட தொடங்கியிருக்கும் நிலையில், காங்கிரஸோ பெரிய பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறது.

தேர்தல் தேதி நெருங்க நெருங்க, பாஜகவும் காங்கிரஸும் தங்கள் கையில் இருக்கும் ஆயுதங்களை கொண்டு வெறித்தனமாக களமாடி வருகின்றன. என்னதான் நடக்கிறது கர்நாடகாவில்.. சுருக்கமாக பார்க்கலாம்.

தெற்கே அமைந்த வட மாநிலம்

பூலோக ரீதியாக இந்தியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள போதிலும், அரசியல் ரீதியாக ஒரு வட மாநிலத்துக்குரிய அத்தனை அம்சங்களும் ஒருங்கே பெற்றிருக்கும் மாநிலம் கர்நாடகா. ஏனைய தென் மாநிலங்களில் நிலவும் அரசியல் களங்களை கர்நாடாகவுடன் ஒப்பிட்டால் இது தெளிவாக புலப்படும். உதாரணமாக, தமிழகம், கேரளா, ஆந்திராவில் சித்தாந்த ரீதியான, கொள்கை ரீதியான அரசியலே எடுபடும். குறிப்பாக, கேரளாவில் கம்யூனிச சித்தாந்தத்தையும், தமிழகத்தில் திராவிட சித்தாந்தத்தையும் கூறலாம். ஆனால், கர்நாடகாவை பொறுத்தவரை அங்கு பெரிய அளவில் சித்தாந்த ரீதியான அரசியல் எடுபடாது. வட மாநிலங்களில் இருப்பதை போல ஜாதி, மத ரீதியான அரசியல்தான் அங்கு செல்லுப்படியாகும்.

கணக்கு மாறுதே..

இதனை புரிந்துகொண்டு களமாடும் கட்சிகள்தான் கர்நாடகாவில் வெற்றிபெற முடியும். தற்போது அங்கு பாஜக ஆட்சியில் இருக்கிறது என்றாலும், அக்கட்சி தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவில்லை. காங்கிரஸ் – ஜேடிஎஸ் ஆட்சியை கவிழ்த்துதான் அங்கு பாஜக அரியணை ஏறியிருக்கிறது. எனவே, கைப்பற்றிய அரியணையை எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல, கை நழுவிச்சென்ற ஆட்சியை இந்த முறை பிடித்துவிட வேண்டும் என்கிற வெறியில் காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், பரிதாபம் என்னவென்றால் இந்த இரண்டு கட்சிகளுக்குமே இந்த முறை பெரிய அளவில் மக்கள் செல்வாக்கு இல்லை என்பதுதான்.

பொம்மைக்கு “நோ”..

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூட அங்கு எந்தக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெளிவாக சொல்லவில்லை. தொங்கு சட்டசபை கூட அமையலாம் என்றே அரசியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக பாஜகவை பொறுத்தவரை கடுமையான உட்கட்சி பூசல் நிலவி வருகிறது. எடியூரப்பா – பசவராஜ் பொம்மை என இரு தரப்பாக பிரிநது கிடப்பது பாஜகவுக்கு பெரிய பலவீனமாக இருக்கிறது.

மேலும், பசவராஜ் பொம்மையை மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர வைக்க கர்நாடகா மக்கள் விரும்பவில்லை என்பது தெளிவாகி உள்ளது. அவரது ஆட்சியில் லஞ்சம், ஊழல் அதிக அளவில் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளே இதற்கு காரணம். அதுமட்டுமல்லாமல், மக்கள் நலப்பணிகளிலும் பொம்மை அரசு கவனம் செலுத்தவில்லை என்ற கோபமும் மக்களிடம் காணப்படுகிறது.

ஜாதி அஸ்திரம்

இதனை நன்றாக புரிந்து கொண்ட பாஜக, இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டுமெனில் ஜாதி அஸ்திரத்தை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைமைக்கு வந்துள்ளது. கர்நாடகாவை பொறுத்தவரை, அங்கு ஒருசில ஜாதிகள்தான் தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை லிங்காயத்து, ஒக்கலிகா ஜாதிகள். கர்நாடகா முழுவதும் பரவலாக வசிக்கும் இந்த ஜாதிக்காரர்களின் வாக்குகளை யார் அதிகம் பெறுகிறார்களோ.. அவர்களையே கர்நாடகா அரியணை வரவேற்கும் என்பது வரலாறு.

எனவே, இந்த இரண்டு சமூக மக்களை கவரும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளது. அதன் ஒருகட்டமாகவே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, லிங்காயத்து மற்றும் ஒக்கலிகா சமூகங்களுக்கு பகிர்ந்து கொடுத்துள்ளது பாஜக அரசு. பாஜகவின் இந்த மூவ், அக்கட்சிக்கு கட்டாயம் பலம் சேர்க்கும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

காங்கிரஸ் எடுக்கும் ‘பிரம்மாஸ்திரம்’

பாஜகவின் இந்த வியூகத்தை சற்றும் எதிர்பார்க்காத காங்கிரஸ் தற்போது வேறு ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். அதாவது, பாஜக ஜாதி காய்களை வைத்த விளையாடும் அதே நேரத்தில், காங்கிரஸ் மத அரசியலை கையில் எடுத்துள்ளது. ஹிஜாப் விவகாரம், இட ஒதுக்கீடு ரத்து போன்ற நடவடிக்கைகளால் பாஜக மீது முஸ்லிம்கள் பெரிய அளவில் அதிருப்தியில் உள்ளனர். மேலும், கிறிஸ்தவர்களும் பாஜகவுக்கு எதிரான மனநிலையிலேயே உள்ளதாக தெரிகிறது.

எனவே, சிறுபான்மை சமூகங்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் வியூகத்தை காங்கிரஸ் வகுத்து வருகிறது. அதேபோல, தலித் மற்றும் பழங்குடியினரை கவரும் முயற்சியிலும் அக்கட்சி இறங்கியிருக்கிறது. இந்த வியூகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுமேயானால், கர்நாடகா அரியணையை காங்கிரஸ் கைப்பற்றிவிடும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.

சக்கர வியூகம்..

ஏனெனில், பாஜக எவ்வளவுதான் முயன்றாலும் ஒக்கலிகா, லிங்காயத்து சமூக வாக்குகளை மொத்தமாக பெறுவது சாத்தியம் இல்லாதது. ஏனெனில் அந்த சமூகங்களில் காங்கிரஸுக்கு கணிசமாக வாக்கு வங்கி உள்ளது. எனவே, அந்த வாக்குகள் நிச்சயம் பிரியும். ஆனால், பாஜக மீது கடும் அதிருப்தியில் இருக்கும் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், தலித், பழங்குடியினரின் வாக்குகள் பெரிய அளவில் பிரியாது. எனவே, இந்த வாக்குகளை மொத்தமாக பெற்றால், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது நிச்சயம். சக்கர வியூகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுமா.. ஜாதி அரசியல் பாஜகவுக்கு கைகொடுக்குமா.. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.