சிவசேனா(உத்தவ் தாக்கரே) எம்.பி.சஞ்சய் ராவத்திற்கு இன்று கொலை மிரட்டல் ஒன்று வந்திருந்தது. அதில் பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்தது போன்று உங்களை கொலை செய்வோம் என்று டெல்லியை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர். இக்கொலை மிரட்டல் குறித்து சஞ்சய் ராவத் போலீஸில் புகார் செய்துள்ளார். இது குறித்து சஞ்சய் ராவுத் கூறுகையில், “எனக்கு மிரட்டல் மெசேஜ் வந்தது.
இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளேன். இந்த மிரட்டலை பற்றி நான் கவலைப்படவில்லை. என் மீது இது போன்ற கொலை மிரட்டல் தாக்குதல்கள் நடந்திருக்கிறது. ஆனால் மும்பை போலீஸார் என்ன செய்தார்கள். மாநில உள்துறை அமைச்சகம் என்ன செய்தது?” என்று கேள்வி எழுப்பினார். இந்த மிரட்டல் குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே லாரன்ஸ் பிஷ்னோய் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளான். டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய், பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவை கொலை செய்ததில் முக்கிய பங்கு வகித்துள்ளான். அந்த கொலையை மேற்கோள் காட்டி நடிகர் சல்மான் கானுக்கும் லாரன்ஸ் கொலை மிரட்டல் விடுத்துள்ளான். சல்மான் கானை கொலை செய்ய அடியாட்களையும் அனுப்பி வைத்தான். ஆனால் இக்கொலை முயற்சி தோல்வியில் முடிந்தது.
சமீபத்தில் லாரன்ஸ் பெயரில் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் லாரன்ஸ் பெயரை பயன்படுத்தி சல்மான் கானுக்கு இமெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். அவரை போலீஸார் கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்துள்ளனர். இக்கொலை மிரட்டல்களால் சல்மான் கானுக்கு போலீஸார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். அவரது வீட்டிற்கும் கூடுதல் போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.