சித்தூர் : பிரதமரின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால், ஆந்திர மாநிலத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என சித்தூரில் நடந்த விழாவில் மாநில தலைவர் சோமு வீரராஜூ பேசினார்.
சித்தூர் மிட்டூர் பகுதியில் புதிதாக கட்டியுள்ள பாஜக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம் அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மீட்டூரில் நடந்த விழாவில் பாஜக மாநில தலைவர் சோமு வீரராஜூ தலைமை தாங்கி பேசியதாவது:
ஆந்திர மாநிலத்தில் பாஜக நன்கு வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடி. ஆந்திர மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார்.
சித்தூர் மாவட்டத்தில் சித்தூர்- தச்சூர் இடையே 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையை அமைத்து வருகிறார். அதேபோல், சென்னை- பெங்களூர் எக்ஸ்பிரஸ் சாலையை அமைத்து வருகிறார். சித்தூர்- திருப்பதி இடையே 8 வழிச்சாலை அமைக்கப்பட்டது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் சித்தூரில் இருந்து திருப்பதிக்கு செல்ல வேண்டும் என்றால் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் பிடிக்கும். ஆனால், தற்போது 75 நிமிடங்களில் திருப்பதிக்கு சென்றுவிடலாம். அதற்கான அனைத்து வசதிகளையும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது. இதேபோல், அனைத்து மாநிலங்களிலும் அனைத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை, விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது முதல்வர் ஜெகன்மோகனின் அராஜக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்றால் பாஜக ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும்.
அதற்கு பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ெதாடர்ந்த பாடுபட வேண்டும். முதல்வர் ஜகன்மோகன் ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்வது, கட்டப் பஞ்சாயத்து, போதை பொருட்கள் கடத்துவது, கஞ்சா விற்பனை செய்வது, மதுபானங்கள விற்பனை செய்வது அதிக அளவு நடைபெற்று வருகிறதுதற்போது நடந்து முடிந்த எம்எல்சி தேர்தலிலும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் போலியான பட்டதாரிகள் வாக்காளர் பட்டியலை பதிவு செய்தார்கள்.
இதில் இருந்து தெரிகிறது ஆளும் கட்சி ஆராஜகங்கள் குறித்து.அதேபோல், சித்தூர் மாவட்டத்தில் இருந்து அதிகளவு மணலை வெளிமாநிலங்களான கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார்கள். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் ஆந்திர மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
இதில், சித்தூர் மாவட்ட பாஜக பொறுப்பாளர் கோலா ஆனந்த், முன்னாள் எம்எல்ஏ வெங்கடேஷ் சவுத்ரி, முன்னாள் எம்பி துர்கா ராமகிருஷ்ணா, பாஜ மாவட்ட தலைவர் ராமச்சந்திரா, நகர தலைவர் ராம் பத்திர, துணைத்தலைவர் தோட்டப்பாளையம் வெங்கடேஷ், பாஜ எஸ்சி மோட்சா மாவட்ட தலைவர் பாபு, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி மற்றும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.