சென்னை: பக்கிங்காம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை இணைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சென்னையின் மிக முக்கிய நெடுஞ்சாலைகள் ஆகும். இந்த சாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இந்த இரண்டு சாலைகளையும் பக்கிங்காம் கால்வாயை கடந்து இணைக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ‘ஓஎம்ஆர் – இசிஆர் சாலைகளை நீலாங்கரையில் இணைக்கும் இணைப்பு சாலை பணியில் ஓஎம்ஆர் முதல் பக்கிங்காம் கால்வாய் வரை ரூ.18 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பக்கிங்காம் கால்வாயை கடந்து இசிஆர் சாலையை இணைப்பதற்கு ஆலோசகர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மூலம் பக்கிங்காம் கால்வாய் கரையில் இறங்கும் வண்ணமும், உட்புறச்சாலைகளை இணைக்கும் வண்ணமும், பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே சுற்றமைப்புடன் கூடிய மேம்பாலம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.