’மக்களைத் தேடி மேயர்’, பள்ளி மாணவர்கள் நலன் சார்ந்த அறிவிப்புகள், மாமன்ற உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாடு நிதி அதிகரிப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளுடன் தாக்கல் செய்யப்பட்டது சென்னை மாநகராட்சி பட்ஜெட். மேலும் சாலை மேம்படுத்துதலுக்கு 881.20 கோடி ரூபாய் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளுக்கு 1,482.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. சொத்து வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வகையில் வருவாய் இருப்பதோடு மத்திய, மாநில அரசுகளின் மானிய நிதிகளும் வருவாய் நிதியாகக் கணக்கிடப்படுகிறது. மொத்தமாக ரூ.7,686 கோடி வருவாய் இருப்பதாகவும், இதனைக் கொண்டு சென்னை மாநகராட்சி மாநகரின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தற்போதைய கடன் தொகை 2,573.54 கோடி ரூபாயாக உள்ளது. குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அரசு துறைகளுக்குச் சென்னை மாநகராட்சி செலுத்த வேண்டிய நிலுவை தொகையின் மதிப்பு 728 கோடி ரூபாய் என்பது குறிப்பிடதக்கது.
”சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுக்கு 140 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது, தாமதம் குறித்து கேட்டால் தொழில், சொத்து வரி ஆகியவை வசூலித்து வருகிறோம், அதன் பின்னர் முறையாக வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்” என்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.
சென்னை மாநகராட்சியின் தற்போதைய நிதி பற்றாக்குறை 3,441 கோடி ரூபாயாக இருப்பதால், நிதி நெருக்கடிகளை குறைத்திட வருவாய் அம்சங்களான தொழில் மற்றும் சொத்து வரி வசூலிப்பில் தொடர் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்படுகிறது. தற்போதைய கடன் தொகை 2,573.54 கோடி ரூபாயாகவும் கடந்த நிதியாண்டான 2022-23ல் 2,591 கோடி ரூபாயாகவும், 2021-22ம் நிதியாண்டில் 2,715 கோடியாகவும் இருந்தது. தற்போதுள்ள 2,574 கோடி ரூபாய் கடனுக்கு 148.82 கோடி வரை வட்டி செலவினங்கள் இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.