செய்யாறு: செய்யாறு அருகே அரசு பள்ளியில் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆங்கில ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கூழமந்தலில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு காஞ்சிபுரம் டவுன் ராஜகோபால் தெருவை சேர்ந்த முருகன்(43) என்பவர் ஆங்கில ஆசிரியராக உள்ளார். இவர் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி வந்தாராம்.
இதேபோல் நேற்று முன்தினம் ஆசிரியர் முருகன் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டாராம். இதுபற்றி அந்த மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் பெற்றோரிடமும் கூறி அழுதுள்ளார். இதையடுத்து செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் முருகனை நேற்று கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.