பெங்களூரு : சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, அமைச்சர் முனிரத்னா மீது, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக தோட்டக்கலைத்துறை அமைச்சர் முனிரத்னா. பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் தொகுதி, பா.ஜ., – எம்.எல்.ஏ.,வாக உள்ளார்.
இந்நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜாலஹள்ளி பகுதியில், தமிழில் பிரசாரம் செய்த அவர், ‘யாராவது ஓட்டு கேட்டு வந்தால், அவர்களை விரட்டி அடியுங்கள்’ என்று பேசினார்.
அவரது பேச்சு கன்னடர், தமிழர்கள் இடையே, பிரச்சனையை துாண்டி விடும் வகையில் இருப்பதாக, தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் குசுமா, பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம், புகார் செய்து உள்ளார்.
முனிரத்னாவின் பேச்சுக்கு, காங்கிரஸ் எம்.பி., சுரேஷ் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதற்கு பதில் அளித்த முனிரத்னா, ‘நான் யாரையும் துாண்டி விடும் வகையில், பேசவில்லை. காங்கிரசில் இருந்த போது, என்னிடம் ஐந்து மொழிகளில் பேசி ஓட்டு சேகரிக்கும்படி சுரேஷ் கூறினார். இங்கு சிவகுமார், சுரேஷ் அரசியல் செய்கின்றனர். எனது தொகுதியில் பிரச்னை ஏற்படுத்தும், கீழ்தரமான அரசியல் செய்ய வேண்டாம்,’ என்றார்.