சென்னை: தமிழகத்தில் பாரத்நெட் திட்டத்தில் இதுவரை 2,007 கிராமப் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை வடம் மூலம் அருகில் உள்ள வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலக தலைமையிடத்துடன் இணைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் சென்னையிலுள்ள வலையமைப்பு இயக்க மையத்தில் தெரியும்படி செய்யப்பட்டுள்ளது என்று தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பாரத்நெட் திட்டத்தினை, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த, ஒன்றிய அரசு ரூ.1815.31 கோடி (USOF நிதி) ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் 57,500 கி.மீ. தொலைவிற்கு மாநிலம் முழுவதும் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துக்களையும் இணைக்க கண்ணாடி இழை வடம் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அனைத்து கிராம பஞ்சாயத்துக்களிலும் 1 Gbps அளவிலான அலைக்கற்றை மூலம் கிராமப்புறப் பகுதிகளில் சேவை வழங்குநர்கள் மூலம் அதிவேக அலைக்கற்றை இணைய சேவையினை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் தொலை மருத்தும் (Tele Medicine), தொலைதூரக் கல்வி (Tele Education) மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடுகள் போன்றவை கிராமப்புற மக்களுக்கு கிடைக்கச் செய்திட இயலும்.
வட்டாரங்களின் எண்ணிக்கை, கிராமப் பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை, உயர்மட்ட கம்பத்தின் வழியாக, நிலைத்தட வழியாக, கண்ணாடி இழை வட வழித்தட செயலாக்கம், புவியியல் ரீதியாக நான்கு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்துவதற்காக நான்கு தொகுப்புகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களுடன் “முதன்மை சேவை ஒப்பந்தம்” மேற்கொள்ளப்பட்டு, தமிழக முதல்வரால் 09.06.2022 அன்று கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஊராட்சி ஒன்றியம், முத்தலகுறிச்சி கிராமப் பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
மாவட்டங்களில் பாரத்நெட் திட்டத்தின் செயலாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. இதுவரை 2,007 கிராமப் பஞ்சாயத்துகள் கண்ணாடி இழை வடம் (OFC) மூலம் அருகில் உள்ள வட்டார ஊராட்சி ஒன்றிய அலுவலக தலைமையிடத்துடன் இணைக்கப்பட்டு, அதன் செயல்பாடுகள் சென்னையிலுள்ள வலையமைப்பு இயக்க மையத்தில் (NOC) தெரியும்படி செய்யப்பட்டுள்ளது. ஓராண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் பாரத்நெட் திட்டத்தின் மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022-23ம் ஆண்டின் மூலதன முதலீட்டிற்கான மாநிலங்களுக்கான சிறப்பு உதவித் தொகை திட்டத்தின் கீழ் “பாரத்நெட் இறுதிக் கட்ட இணைய இணைப்பு (BharatNet Last Mile Connectivity) திட்டத்தைச் செயல்படுத்த ரூ.184 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் பாரத்நெட் வலையமைப்பின் வழியாக ஏறக்குறைய 20,000 அரசு அலுவலகங்களை இணைக்க இயலும்.
மேலும், தமிழ்நாடு மாநில பெரும்பரப்பு வலையமைப்பில் (TNSWAN) இணைக்கப்பட்டுள்ள அரசு அலுவலகங்களையும் படிப்படியாக இத்திட்டத்தின் வலையமைப்பிற்கு மாற்றிட திட்டமிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.