சென்னை: தமிழகத்தில் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசனை நடைபெற்று வருவதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டசபையில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இதில், நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. அதற்கடுத்து, திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை மாவட்டங்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து ஒட்டன்சத்திரம், பழநி; திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம், உடுமலை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளை பிரித்து, பழநியை தலைமையிடமாக வைத்து, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என அமைச்சர் சக்கரபாணி தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் முதல்வரிடம் வலியுறுத்தினர். இந்நிலையில், கும்பகோணம், ஆரணி உள்ளிட்ட 8 நகரங்களை தனி மாவட்டங்களாக அறிவிக்க சட்டசபையில் கோரிக்கை எழுந்தது.
இதற்கு கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதில் அளித்து பேசியதாவது:
தமிழகத்தில் 8 மாவட்டங்களை பிரிப்பதற்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு எம்.எல்.ஏ.க்கள்,எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு சென்று, நிதிநிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement