சென்னை: திமுக ஆட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு நடந்தே தீரும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வெள்ளக்காலங்களில் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் உபரி நீரை திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களுக்கு திருப்பி விடுவதற்காக 262 கிலோ மீட்டருக்கு கால்வாய் வெட்டும் ரூ.14 ஆயிரம் கோடியிலான காவிரி-தெற்கு வெள்ளாறு-வைகை – குண்டாறு இணைப்புத் திட்டம் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கு முந்தைய அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இத்திட்டத்துக்கென நிலங்களை அளவீடு செய்வது, கையகப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன்பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தத் திட்டம் குறித்து அதிமுக சார்பில் இன்று (சனிக்கிழமை) தமிழக சட்டப்பேரவையில் கவன தீர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அவை முன்னவரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பதில் அளித்தார். அதில், “இந்தத் திட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்ததைப் போல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார். அவர் மட்டுமே இந்தத் திட்டத்தை செய்யவில்லை. காவிரி – குண்டாறு இணைப்பு குறித்து சிந்தித்தவர் கருணாநிதி தான். அதற்காக முதன்முதலில் கதவணை கட்ட நிதி ஒதுக்கியவர் கருணாநிதி. அந்த கதவணையைக் கட்டியது நான் தான். 2008 ஆம் ஆண்டு கருணாநிதி இதற்கான ஆணையைப் பிறப்பித்தார். 2009 ஆம் ஆண்டு பணி தொடங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் 2020 ஆம் ஆண்டு நில எடுப்பு பணிக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 34 கோடி தான் செலவு செய்யப்பட்டது. 71 ஏக்கர் நிலம் தான் எடுக்கப்பட்டது. திமுக ஆட்சி வந்த பிறகு 2 ஆண்டுகளில் நில எடுப்பு பணிக்கு ரூ.300 கோடியை திமுக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 690 ஏக்கர் நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ரூ.554 கோடி நிதி நில எடுப்பு பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் கால்வாய் வெட்டும் பணி நடைபெறவில்லை. திமுக ஆட்சியில் ரூ.177 கோடி கால்வாய் வெட்டும் பணிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. 64 சதவீத கால்வாய் வெட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது. திமுக ஆட்சியில் காவிரி – குண்டாறு இணைப்பு நடந்தே தீரும்.” என்று உறுதி அளித்தார்.