தென்காசி அருகே மண் மனம் மாறாமல் நடக்கும் பங்குனி நோன்பு திருவிழா

தென்காசி: இயந்திரமயமான வாழ்க்கையில் புதிய தொழில் நுட்பங்களின் வருகையால் மனிதனின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை நோக்கி தான் ஒவ்வொரு காலகட்டங்களில் நமது பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். பழங்காலத்தில் இருந்து உண்ணும் உணவு, உடுத்தும் உடை, உறங்கும் வீடு, கற்கும் கல்வி, வீட்டு விசேஷங்கள் என அனைத்துமே மாறிவிட்டது. கால மாற்றத்தால் அம்மி, உரல் போன்றவை மிக்சி, கிரைண்டர் என மாறியது. தற்போது அதுவும் இன்றி மாவு பாக்ெகட்டுகளாக விற்பனைக்கு வந்து விட்டது.

ஆனால் தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே அரியநாயகிபுரம் ஊராட்சிக்குட்பட்ட அருணாசலபுரம் கிராமத்தில் இன்றளவும் பழமை மாறாமல் கோயில் விழாக்கள் மற்றும் புராண நாடகங்கள் நடைபெற்று வருகிறது. சுமார் 50 ஆண்டுகளை கடந்தும் மேடை நாடகம் நடத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் முக்கிய இரண்டு விழாக்களில் ஒன்று புரட்டாசி மாதம் கிருஷ்ணசுவாமி கோவிலில் திருநாள் மற்றும் பங்குனி மாதம் வடகாசி அம்மன் கோயிலில் நடைபெறும் பங்குனி நோன்பு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில் வடகாசி அம்மன் கோயிலில் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி நோன்பு திருவிழா இன்றளவும் மண் மணம் மாறாமல் அப்படியே கொண்டாடப்பட்டு வருகிறது.

பங்குனி நோன்பு கடைப்பிடிக்கும் பெண்கள் 21 நாட்கள், 11 நாட்கள், ஏழு நாட்கள் என தங்களுக்கு ஏற்ற நாட்களை தேர்வு செய்து நோன்பு கடைப்பிடிக்கின்றனர். நோன்பிருக்கும் பெண்கள் எந்த விதமான உணவும் உண்ணாமல் கருப்பட்டியில் தயாராகும் பானகம் மட்டுமே அருந்தி கடும் விரதம் இருக்கின்றனர். இந்த விரதத்தை தொடங்குவதற்கு முன்பாக விரதம் தொடங்கும் நாள் அன்று விரதம் இருக்கும் பெண்கள் வீட்டில் கிராமத்து மக்கள் மற்றும் உறவுக்கார பெண்கள், ஆண்கள் என ஒன்று கூடி உரலில் பச்சரிசி மாவு, கருப்பட்டியை சேர்த்து இடித்து மாவாக்கி அனைத்து வீடுகளுக்கும் கொடுத்து நோன்பு இருக்க தொடங்குகின்றனர். இதனால் இந்த கிராமத்தில் பெரும்பாலான வீடுகளில் இன்றளவும் உரல் பாதுகாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.