சென்னை: Sangavi About Vijay (விஜய் குறித்து சங்கவி பகிர்ந்த ரகசியம்) – நடிகை சங்கவியால் விஷ்ணு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் கடுமையாக திட்டு வாங்கினாராம்.
இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்படி பிரபலமான இயக்குநரின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜய். இதனால் அவருக்கு திரைத்துறைக்குள் நுழைவதற்கான கதவு எளிதாக திறந்தது. ஆனால் திறமை என்ற ஒன்று இல்லாமல் இன்று அவர் இந்தியாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக வளரவில்லை.
விஜய்க்கு துணை நின்ற எஸ்.ஏ.சந்திரசேகர்
தனது மகனை சினிமாவுக்குள் இறக்கிவிட எஸ்.ஏ.சந்திரசேகருக்கு விருப்பம் இல்லாமல்தான் இருந்தது. ஆனால் விஜய்யின் பிடிவாதம் காரணமாக ஒத்துக்கொண்டார் எஸ்.ஏ.சி. இதனையடுத்து அவருக்காக நாளைய தீர்ப்பு படத்தை இயக்கினார். அந்தப் படம் 1992ஆம் ஆண்டு வெளியானது. ஆனால் விஜய் எதிர்பார்த்தபடி அவருக்கு முதல் படம் அமையவில்லை. படமும் படுதோல்வி அடைய விஜய்யும் கடுமையான விமர்சனங்களையும், உருவ கேலியையும் சந்தித்தார்.
மனம் தளராத எஸ்.ஏ.சந்திரசேகரும், விஜய்யும்
இருந்தாலும் மனம் தளராத சந்திரசேகர் தனது மகனை பெரிய ஸ்டார் ஆக்கிவிட வேண்டும் என உறுதி பூண்டு செந்தூரப்பாண்டி, ரசிகன் தேவா என வரிசையாக விஜய்யை வைத்து படங்களை இயக்கினார். இவற்றில் ரசிகன் படமும், செந்தூரப்பாண்டி படமும் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. எஸ்.ஏ.சி மீது உள்ள மதிப்பால் விஜயகாந்த் செந்தூரப்பாண்டி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.
விஜய்யை விடாத எஸ்.ஏ.சி
தேவா படத்துக்கு பிறகு ஜானகி சௌந்தர் இயக்கத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் நடித்தார் விஜய். இதில் அஜித்தும் நடித்திருந்தார். ஆனால் இந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து எஸ்.ஏ.சி மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்கினார். படத்துக்கு விஷ்ணு என பெயரிடப்பட்டது.
தமிழ் சினிமாவின் ஃபேவரைட் ஜோடி சங்கவி
விஷ்ணு படத்தில் விஜய்க்கு ஜோடியாக சங்கவி நடித்தார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் ரசிகன் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் பெற்ற வெற்றியாலும், அதில் கொஞ்சம் க்ளாமர் தூக்கலாக இருந்ததாலும் இந்தப் படத்திலும் விஜய் – சங்கவி ஜோடிக்கு ரசிகர்களிடையே மவுசு கூடியது. படத்தின் பெரும்பான்மையான பகுதிகள் ஊட்டியில் படமாக்கப்பட்டன. படமும் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. இருவருக்கும் இடையில் என்னதான் கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தாலும் விஷ்ணு ஷூட்டிங்கில் சங்கவியால் விஜய் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் பயங்கரமாக திட்டு வாங்கியிருக்கிறார்.
குளிரில் நடுங்கிப்போன விஜய்
அதாவது, படத்தின் ஒரு காட்சியில் ஊட்டியில் தண்ணீரில் இரண்டு பேரும் மூழ்கி எழுவது போல் காட்சியை படமாக்கினாராம் எஸ்.ஏ.சந்திரசேகர். அப்போது சங்கவி டீன் ஏஜ் வயதில்தான் இருந்தாராம். எஸ்.ஏ.சந்திரசேகர் காட்சியை விளக்கிவிட்டு ஆக்ஷன் என்று சொன்னதும் சங்கவி உடனடியாக நீரில் மூழ்கி எழுந்துவிட்டாராம். ஆனால் விஜய்யோ குளிரில் நடுங்கிகொண்டிருந்தாராம்.
சங்கவியால் எஸ்.ஏ.சியிடம் திட்டு வாங்கிய விஜய்
இதனைப் பார்த்த சந்திரசேகர் கோபத்தின் உச்சத்துக்கு சென்று, “அந்தப் பொண்ண பாரு. அவங்களே தண்ணில மூழ்கி எழுந்திருக்கிறாங்க. உனக்கு என்ன வந்துச்சு” என கடுமையாக திட்டிவிட்டாராம். இதனையடுத்து சங்கவியிடம் சென்ற விஜய், ‘நீ ஏன் இப்டி உடனே உடனே பண்ற. பாரு உன்னால அவர்ட்ட நான் செமயா திட்டு வாங்குறேன்’ என கவலைப்பட்டாராம். இதனை நடிகை சங்கவி ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.